/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/out 2_0.jpg)
நாடி ஜோதிடம் குறித்த செய்திகள் கேட்கக் கேட்க வியக்க வைக்கின்றன. நாடி ஜோதிடம் மூலம் எண்ணற்ற நன்மைகளைப் பலர் அடைந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரங்களோடு பிரபல நாடி ஜோதிடர் துரை சுப்புரத்தினம் விளக்குகிறார்.
ஒரு மருத்துவரின் குடும்பம் தொடர்ந்து நம்மிடம் நாடி ஜோதிடம் பார்த்து வருகிறார்கள். மொத்தமுள்ள மூன்று சகோதரர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் நம்மைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பி அவர் இங்கு வரும்போது நம்மிடம் அழைத்து வந்தனர். அவருடைய ஓலை நமக்குக் கிடைக்கிறது. "இந்த ஓலையை நீ பார்க்கும்போது உயிரோடு இருக்கப்போவது ஒரே ஒரு சகோதரன் தான்" என்று அதில் வருகிறது. ஓலையை மீண்டும் பார்க்கச் சொல்கின்றனர். அப்போதும் அதே தான் வருகிறது. பிறகு அவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
வீட்டிற்குச் சென்ற பிறகு அவர்களிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. "காலையில் பீச்சுக்கு காரில் சென்ற என்னுடைய சகோதரன் இறந்துவிட்டான்" என்றார் சகோதரர்களில் ஒருவர். தாமதமாகவே அந்தத் தகவல் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. என்னையே ஆச்சரியப்படுத்திய சம்பவம் இது. சிலர் நாடி ஜோதிடத்தில் நம்பிக்கையில்லாமல் இருந்தாலும் நேரம் வரும்போது அவர்கள் தானாக நம்மிடம் வருவார்கள்.
இளம் தலைமுறையினர் பலர் கேள்விப்பட்டபோது நம்பாமல் தாங்களே நேரில் வந்து பார்த்த பிறகு நம்பிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஒரு வழிகாட்டியாகத் தான் நாம் இருக்கிறோமே தவிர நாம் கடவுள் அல்ல. அரசு நிறுவனத்தில் மிக உயரிய இடத்தில் இருக்கும் ஒரு அரசு அதிகாரி ஒருமுறை நம்மிடம் வந்தார். ஓலை கிடைத்துவிட்டது. ஆனால் நேரமின்மை காரணமாக இரண்டு மூன்று நாட்கள் கழித்து நாம் எழுதி வைத்த பலன்களைப் பார்க்க வந்தார். "உங்கள் மகளுடைய திருமணம் தடைப்படும்" என்று அதில் இருந்த வரி அவரைக் கோபப்படுத்தியது.
பரிகாரங்கள் செய்தால் நிச்சயம் திருமணம் நடக்கும் என்பதையும் கூறினேன். ஆனால் என்மேல் அவருக்கு ஏற்பட்ட கோபம் அடங்கவில்லை. மிகுந்த மனவருத்தம் அடைந்த நான் அவரை என்னிடம் அனுப்பிய நபரைத் தொடர்புகொண்டு நடந்தவற்றைக் கூறினேன். இந்த நண்பர் அந்த அதிகாரியை அதன்பிறகு அழைத்து நம் நாடி ஜோதிடம் மூலம் தனக்கு நடந்த நிகழ்வுகளை ஆதாரத்துடன் விளக்கினார். இதனால் சமாதானமடைந்தார் அந்த அதிகாரி. கல்யாண நேரமும் வந்தது.
மாப்பிள்ளை சிங்கப்பூரிலிருந்து இங்கு வர வேண்டியிருந்தது. கிளம்புவதற்கு முதல் நாள் மாப்பிள்ளையின் தந்தையை சிங்கப்பூர் அரசாங்கம் கைது செய்துவிட்டது. பிறகு அவர் சில காலம் கழித்து வெளிவந்து, அதன் பிறகு தான் அந்தத் திருமணம் நடைபெற்றது. நாம் சொன்னது போல் ஏற்பட்ட தடை அது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அந்த அதிகாரி என்னிடம் மன்னிப்பு கேட்டார். இப்போது அவருடைய மகளும் மருமகனும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)