Advertisment

பெரிய கோயில் குடமுழுக்கு; யாகசாலைக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு!

Muhurthakaal planting event for the Yagasalai ahead of Temple Kudamukku ceremony!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனு ஆற்றங்கரையில் 33 அடி உயரத்தில் வானில் தாவிச் செல்லும் பிரமாண்ட வெள்ளைக் குதிரையுடன் எழுந்தருளியுள்ளது பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில். இந்தப் பகுதியில் பெரிய கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

Advertisment

மாசிமகத் திருவிழாவில் பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப் பூ மாலைகள் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் பால் குடம், காவடி, கரும்புத் தொட்டில் என ஏராளமான நேர்த்திக்கடன்களை செலுத்துவர். அந்த நாட்களில் மட்டும் லாரி, வேன், கார், டிராக்டர்கள் என பல வாகனங்களிலும் ஏற்றி வரும் காகிதப் பூ மாலைகள் பிரமாண்ட குதிரை சிலை மறையும் அளவிற்கு ஆயிரக்கணக்கான மாலைகள் குவிவதைக் காண பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து செல்வார்கள்.

Advertisment

இந்தக் கோயிலில் திருப்பணிக்குழு அமைத்து கோயில் மற்றும் பிரம்மாண்ட வெள்ளைக் குதிரை சிலை திருப்பணிகள் நடந்து வருகிறது. திருப்பணிகள் முடிவுறும் நிலையில் எதிர்வரும் ஜூன் 16-ந் தேதி குடமுழுக்கு செய்ய திருப்பணிக்குழுவினர் மற்றும்கிராமத்தினர் முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் குடமுழுக்கு நடத்துவதற்கு முன்பு புனித நீர் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்ய 26 யாக குண்டங்கள் அமைப்பதற்கான மற்றும் யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு கோவில் பணிக்குழுவினர் தலைமையில் கிராமத்தினர் முன்னிலையில் நடந்தது. இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். கூடியிருந்த அனைவரும் முகூர்த்தக்காலை தொட்டு நட்டு மஞ்சள், குங்குமம் பூசினர்.

குடமுழுக்கில் கீரமங்கலம் சிவாச்சாரியார் ரவி சங்கர் தலைமையில் சுமார் 60 சிவாச்சாரியார்கள் யாக பூஜையிலும், குடமுழுக்கிலும் கலந்து கொள்கின்றனர். குடமுழுக்கு நாளில் லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள், வரவேற்பு, மற்ற கிராமங்களுக்கு அழைப்பு, பாதுகாப்பு, அனைவருக்கும் புனித நீர் தெளிக்கும் ஏற்பாடுகள், மேலும் போக்குவரத்து ஏற்பாடுகள், லட்சம் பேருக்கு அன்னதான ஏற்பாடுகளும் விழாக்குழுவினரால் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடமுழுக்கு விழாவில் சில அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பெரிய கோயில் குடமுழுக்கு பெரிய அளவில் இருக்கும் என்கிறார்கள் கிராமத்தினர்.

temple pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe