Advertisment

”எந்த மலரை எந்த பூஜைக்கு பயன்படுத்தலாம்?” - ஜோதிடர் தரும் எளிமையான விளக்கம்

Lalgudi Gopalakrishnan

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மீக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மீகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், எந்தெந்த மலர்களால் பூஜை செய்தால் விஷேசம் உண்டாகும் என்பது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

Advertisment

மலர்களால் நாமும் மலரலாம். எந்தெந்த மலர்களால் கடவுளை பூஜை செய்தால் நம்முடைய வாழ்க்கை மலரும் என்பதைப் பற்றி பார்க்கலாம். நம்முடைய பிரார்த்தனையை கடவுளுக்கு எடுத்துச் செல்லும் தூதுவர்கள்தான் மலர்கள். துளசி, மகிழம், தாமரை, செண்பகம், வில்வம், மரிக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, நெல்லி ஆகியவற்றின் இலைகளையும் பூஜைக்கு பயன்படுத்தலாம்.

Advertisment

விஷ்ணுவுக்கு துளசியாலும் சிவனுக்கு வில்வத்தாலும் பூஜை செய்வது விஷேசமானது. சிவனுக்கு கொன்றை, ஊமத்தை மலர்களாலும் பூஜை செய்யலாம். மலர்களின் வண்ணத்திற்கு ஏற்றவாறு அவற்றின் குணங்கள் அமைந்துள்ளன. வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்டவை. அவற்றை வைத்து பூஜை செய்யும்போது மன அமைதி கிடைக்கும். சிவப்பு வண்ண பூக்களால் பூஜை செய்யும்போது காரியத்தில் வெற்றியும் தொழிலில் மேன்மையும் கிடைக்கும். மஞ்சள் வண்ண பூக்கள் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியவை.

பூவரசம் பூவினால் பூஜை செய்யும்போது உடல் நலம் சீராகும். வாடாமல்லி மரண பயத்தை நீக்கக்கூடியது. மல்லிகை கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளை நீக்கி குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். செம்பருத்தியால் பூஜை செய்யும்போது தைரியம் அதிகமாகும். மரிக்கொழுந்தை பயன்படுத்தி பூஜை செய்தால் குலதெய்வத்தால் ஏற்பட்ட சாபங்கள் நீங்கும். சம்பங்கி மலரால் பூஜை செய்தால் இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும்.

வெள்ளை சங்குப்பூவை சிவனுக்கும், நீல சங்குப்பூவை விஷ்ணுவுக்கும் பூஜை செய்வது நல்லது. நித்யகல்யாணி பூவினால் பூஜை செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். பவள மல்லியை தேவலோக புஷ்பம் என்று அழைப்பார்கள். அதனால் அதை வைத்து பூஜை செய்தால் சித்தர்கள், ரிஷிகள், முனிவர்களின் பரிபூரண ஆசியும் அருளும் கிடைக்கும்.

நாகலிங்க பூவால் சிவனுக்கு பூஜை செய்தால் வெகுநாளாக தொல்லை தரும் எதிரிகள் காணாமல் போவார்கள். மகாலட்சுமிக்கு செந்தாமரை பூவால் பூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். சரஸ்வதிக்கு வெண்தாமரையால் பூஜை செய்தால் கல்வியில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். காளிகாம்பாள் அம்மனுக்கு அமாவாசை, பௌர்ணமி தினங்களில் செவ்வரளி மலரால் பூஜை செய்தால் செய்வினை தோஷங்கள் நீங்கிவிடும்.

மனிதர்கள் சூடாத பூ சங்கு புஷ்பம். சனி பகவானை நீல சங்கு புஷ்பத்தால் பூஜை செய்தால் தீராத நோய்களும் தீரும். விநாயகரை எருக்கம் மலர்களால் பூஜை செய்தால் தடைபட்டு நின்ற எந்தக் காரியமும் சரியாகும். எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த மலர்களால் பூஜை செய்ய வேண்டும் என்பதை அறிந்து அந்தந்த மலர்களால் பூஜை செய்து நலமும் வளமும் பெற்று வாழுங்கள்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe