Skip to main content

ஆப்பிரிக்க பெண்ணின் செய்வினையால் துடிதுடித்த தமிழக பெண் - மர்மங்கள் விளக்கும் லால்குடி கோபாலகிருஷ்ணன்

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மீக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மீகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், செய்வினை கோளாறுகள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

"இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் செய்வினை, கருப்பு மந்திரம் பற்றிய விஷயங்களைச் சொன்னால் நம்புவதற்குக் கடினமாக உள்ளது. ஆனால், செய்வினை என்பது உண்மை. அதன் வலியும் வேதனையும் வார்த்தைகளால் விளக்க முடியாதது. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் உண்மை புரியும். இன்றைக்குச் சென்னையில் இருந்துகொண்டு கோவையில் இருக்கக்கூடிய பாலத்தைத் திறந்து வைக்க முடிகிறது. கணினி மென்பொருளைத் தொலைவிலிருந்தே இயக்க முடிகிறது. வைரஸ் அனுப்பி கணினியைப் பழுதாக்கவும் முடியும். இது தொலைநிலை தொடர்பு மூலம் சாத்தியமாகிறது. அதுபோலத்தான் செய்வினையும்.

 

என்னுடைய குருநாதரான காலம் சென்ற கிருஷ்ணன் நம்பூதிரியிடம் நான் ஜோதிடம் பயின்ற போது, எனக்கு ஏற்பட்ட செய்வினை தொடர்பான நேரடியான அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். யாருடைய சொந்த வாழ்க்கையையும் விளக்கக்கூடாது என்பதற்காக இந்தச் சம்பவத்தில் வரும் பெயரை மட்டும் மாற்றியுள்ளேன். 

 

சென்னை திருவல்லிக்கேணியில் இடுக்குச் சந்தில் உள்ள நெருக்கமான குடியிருப்பில் நிர்மலா என்ற ஒரு பெண் இருந்தார். கணினித் துறையில் பட்டம் பெற்று வேலைக்காக அமெரிக்கா செல்கிறார். கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலையிலிருந்த அவர், சிநேகிதியுடன் ஏற்பட்ட திடீர் பிரச்சனையால் நிம்மதியை இழந்துவிட்டார். சிநேகிதி ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் வங்கியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அந்த வங்கியில் அவர் ஒரு மோசடி செய்ய, அதை நிர்மலா காட்டிக்கொடுத்துவிடுகிறார். அதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுவிடுகிறது. 

 

அந்தப் பெண் கைதானபோது நிர்மலாவை பழி வாங்கும் வெறியோடு பார்த்திருக்கிறார். அதை நினைக்கும் போதெல்லாம் உடலில் கம்பளிப்பூச்சி ஊர்வது மாதிரியான உணர்வு நிர்மலாவின் உடலில் ஏற்பட்டதாம். கெட்ட கனவுகள் தினமும் அவளைப் பின் தொடர கொஞ்ச நாட்களிலேயே மனநோயாளி போல மாறிவிட்டாள். ஒருகட்டத்தில் வேலையும் பறிபோய், சென்னைக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார். சென்னை வந்தும் அவருக்கு நிம்மதியில்லை. இரவு நேரங்களில் அவரது அலறலால் பக்கத்து வீட்டுக்காரர்களின் தூக்கமும் பறிபோகியுள்ளது. எத்தனையோ மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கியும் பயனில்லை. மனோதத்துவ நிபுணர்களிடம் அழைத்துச் சென்றும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை ஏதோ ஆவி பிரச்சனை என்று சொல்லி பூசாரிகளும், குடுகுடுப்பைக்காரர்களும் மாறிமாறி பணம் பறித்திருக்கிறார்கள். 

 

பின்னர், அவரது உறவினர் ஒருவர் அளித்த யோசனையால் என்னுடைய குருநாதரிடம் அழைத்துவந்தனர். அவர் ஜெபம் செய்து தன்னுடைய பிரசன்னத்தைத் தொடங்கினார். பிரசன்னம் பார்த்தபோது நிர்மலா பாம்பிடம் மாட்டிக்கொண்ட தவளைபோல துஷ்ட மந்திரத்தால் செய்வினையில் சிக்கித்தவிப்பது தெரியவந்தது. அந்த மந்திரம் அயல்நாட்டில் இருந்து ஏவலால் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செய்வினை மந்திரம் ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் மந்திரம். அதன் பிறகு, என்னுடைய குருநாதரின் அறிவுரைப்படி சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் குருதி பூஜையும், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமாவாசை ஹோமமும் செய்தார்கள். அதன் விளைவாக ஏவல் பிரச்சனை நீங்கி நிர்மலா குணமடைந்தார். அந்தப் பெண் இப்போதும் நலமாக வாழ்ந்துவருகிறார். 

 

இனம் புரியாத பயம், தொழிலில் திடீர் முடக்கம், மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத தீராத நோய்கள், தொடர்ச்சியான கெட்ட கனவுகள் ஆகியவைதான் செய்வினைக்கு ஆட்பட்டிருப்பதற்கான அறிகுறிகள். இந்தப் பிரச்சனையால் ஆட்பட்டவர்கள் இன்றைக்கும் பலர் இருக்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சாம்பிராணி தீபம் போடும்போது குங்கிலியத்தையும் வெண்கடுகையும் சேர்த்துப் போட்டால் செய்வினை கோளாறு இருந்தால் நீங்கிவிடும். அத்தோடு, சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் மற்றும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்குச் சென்றுவந்தால் செய்வினைப் பிரச்சனைகள் அகன்று எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் நலமாக வாழலாம்". 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !