Skip to main content

செவ்வாய் தோஷத்திற்கு இவ்வளவு ஈஸியான பரிகாரங்களா? - ஜோதிடர் கூறும் எளிய பரிகாரங்கள் 

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், செவ்வாய் தோஷம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

“திருமணத் தடைகளை ஏற்படுத்தும் நாகதோஷம் போன்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்த கூடியது செவ்வாய் தோஷம். ஒரு ஜாதகருக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் வரும். இது லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, சுக்ரனுக்கோ அமைப்பாக அமைந்தாலும் செவ்வாய் தோஷம் வரும். பல விதமான விதிவிலக்குகளும் செவ்வாய் தோஷத்திற்கு உண்டு. 

 

குரு பார்வை, கிரக யுத்தம் உட்பட பல விஷயங்களை வைத்து ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதை தேர்ந்த ஜோதிடர் மட்டுமே சொல்லமுடியும். பொதுவாக தென்னிந்தியாவில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது அல்லது அதன் பாதிப்பு குறைவாக இருக்கும். செவ்வாய்க்கு காரணமான தெய்வம் முருகன். முருகப்பெருமானின் வழிபாடு தென்னிந்தியாவில் மட்டுமே இருப்பதும், தென்னிந்தியாவிற்கே ஆதிபத்ய கிரகமாக செவ்வாய் இருப்பதுமே அதற்கு காரணம். 

 

ஆனாலும், திருமணத்திற்கு முன்னால் சில பரிகாரங்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, துவரையை தானம் செய்தால் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் ஓரளவிற்கு கட்டுப்படும். செவ்வாய் கிழமையின் ராகு காலத்தில் கடைசி அரைமணி நேரம் விஷேசமானது என்பதால் அந்த நேரத்தில் மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் படித்தால் மிகவும் நல்லது. அதன் மூலம் திருமணத் தடையும் நீங்கும். 

 

முருகனின் அறுபடை வீடுகளுக்குச் சென்றாலும் செவ்வாய் தோஷத்திலிருந்து நிவர்த்தி கிடைக்கும். செவ்வாய் தோஷம் கடுமையாக உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று பரிகார பூஜைகள் செய்தால் நல்ல பலன்கள் உண்டாகும். சிவப்பு நிற சேலை, மஞ்சள் கயிறை சுமங்கலி பெண்களுக்குத் தானமாக செய்தால் செவ்வாய் தோஷத்தின் கடுமை குறையும். நான் மேலே கூறிய தோஷங்களையெல்லாம் செய்ய முடியாதவர்கள் வன்னி மரத்தை வணங்கலாம். 

 

கணவன் மனைவிக்குள் சண்டை மற்றும் குழந்தை பாக்கியத்தில் குறைபாட்டையும் செவ்வாய் தோஷம் ஏற்படுத்தக்கூடியது. எனவே செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரத்தை செய்துவிட்டு திருமணம் செய்யுங்கள். எந்த சுபகாரியங்கள் நடைபெற வேண்டும் என்றாலும் செவ்வாயின் பரிபூரண அனுகிரகம் தேவை. எனவே செவ்வாய் தோஷமுள்ளவர்கள் முருகனை வழிபட்டு வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்”. 

 

 

Next Story

“காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு...” - மூச்சுக்காற்று மூலம் வசியம் செய்யும் ரகசியத்தை விளக்கும் ஜோதிடர் 

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், மூச்சுக்காற்று குறித்தும் பிராணாயாமம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

“இன்றைக்கு எல்லோருக்கும் நிறைய பிரச்சனைகளும் நிறைவேறாத ஆசைகளும் உள்ளன. நம்முடைய மூச்சுக்காற்றைப் பயன்படுத்தியே அதை எப்படி சரி செய்துகொள்ளலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

 

மூச்சுக்காற்றுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பயமாக இருக்கும்போது மூச்சுக்காற்று தடைபடுகிறது. மனம் சஞ்சலப்படும்போது மூச்சுக்காற்றும் சலனமடையும். உடலையும் மனதையும் இணைக்கக்கூடியது மூச்சுக்காற்று. வலது கால் பெருவிரலில் இருந்து கிளம்புவது சூரியகலை. இடது கால் பெருவிரலில் இருந்து கிளம்புவது சந்திர கலை. சித்தர்களின் இலக்கியத்தில் மூச்சுக்காற்று கால் என்று  பெருமைப்படுத்தப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜர் வேறு காலால் ஆடுவதையும் மதுரையில் கால் மாற்றி ஆடுவதையும் பார்க்க முடியும். ஆண் தன்மையைக் குறிக்கக்கூடியது சிதம்பர நடனம். பெண் தன்மையைக் குறிக்கக்கூடையது மதுரை.

 

சூரியன் ஆண்; சந்திரன் பெண். வலது கால் மீது இடதுகாலை போட்டு அமர்ந்தால் சூரிய ஆற்றல் அதிகமாகும். இடது கால் மீது வலது காலை போட்டுக்கொண்டு அமர்ந்தால் சந்திர ஆற்றல் அதிகமாகும். வலது கால் மீது இடது கால் போட்டு அமர்பவர்கள் ஆதிக்க சக்தியாக இருப்பார்கள். மூச்சுக்காற்று ஒருநாளைக்கு 21,600 முறை நிகழ்கிறது. 10,800 உள்வாங்குதலும் 10,800 வெளியிடலும் இதில் அடங்கும். இந்த 21,600 மூச்சுக்காற்றுகளை விளக்குவதற்காக சிதம்பரம் பொன்னம்பலத்தில் 21,600 தங்க ஓடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மூச்சுக்காற்றியின் அவசியத்தை பல இடங்களில் சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

“காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு கூற்றை யுதைக்குக் குறியதுவாமே” என்பது திருமூலரின் வாக்கு. காலை 4 மணிக்கு நம்முடைய மூச்சு எந்தப் பக்கமாக வெளியேறுகிறது என்பதை வைத்து அன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை சொல்லிவிடமுடியும். இதைத்தான் சரஜோதிடம் என்பார்கள். முறையான மூச்சுப்பயிற்சி செய்தால் நம்முடைய தனிப்பட்ட ஆற்றல் பிரபஞ்ச சக்தியாக விரிவடையும். முறையான மூச்சுப்பயிற்சி செய்தால் நம்முடைய உடல் புல்லாங்குழல்; இல்லாவிட்டால் நம்முடைய உடல் அடுப்பு ஊதும் குழல். 

 

மூச்சு விடுதலில் மூன்று நிலைகள் உள்ளன. மூச்சை உள்ளே இழுப்பது(பூரகம்), இழுத்த மூச்சை உள்ளே தக்க வைப்பது(கும்பகம்), தக்க வைத்த மூச்சை வெளியே விடுவது(ரேசகம்). இதைத்தான் பிராணாயாமம் என்கிறார்கள். இதை மாறிமாறி நாம் செய்யும்போது மூச்சு நாடி சுத்தமாகிறது. இடது நாசி வழியாக நான்கு வினாடிகள் சுவாசத்தை உள்ளிழுத்து, அதை 16 வினாடிகள் தக்க வைத்து, அதை வலது நாசி வழியாக 8 வினாடிகள் வெளியிட்டால் அது ஒரு சுழற்சி எனப்படும். இதுபோல 21 சுழற்சி செய்தால் நம்முடைய உடலும் மனமும் தூய்மையடையும். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வலது நாசி வழியாக இழுத்து இடது நாசி வழியாக வெளியிட வேண்டும். செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இடது நாசி வழியாக இழுத்து வலது நாசி வழியாக வெளியிட வேண்டும். வியாழக்கிழமை அன்று வளர்பிறையாக இருந்தால் வலது நாசி வழியாக இழுத்து இடது நாசி வழியாக வெளியிட வேண்டும். தேய்பிறையாக இருந்தால் இடது நாசி வழியாக இழுத்து வலது நாசி வழியாக வெளியிட வேண்டும். 

 

தொடர்ந்து இதை செய்யும்போது நம்முடைய ஆசையும், பிரார்த்தனையும் காற்றில் கலந்து உரிய இடத்தைச் சென்றடையும். அப்படியென்றால் காற்றின் மூலம் ஒருவரை கட்டுப்படுத்த முடியுமா, வசியம் செய்ய முடியுமா என்றால் முடியும். காரணம், அரசன் முதல் ஆண்டி வரை அனைவருமே காற்றின் மூலமாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளார்கள். ஒருவர் நமக்கு அடிபணிய வேண்டும் என்று நினைத்து இதை நாம் செய்தால் நிச்சயம் அவர் நமக்கு அடிபணிவார். வயிற்றில் காற்றை அடைத்து வைத்திருக்கும் கும்பக நிலையில் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்தால் 10,800 ஜெபம் செய்வதற்கு சமமாகும். சித்தர்களின் இந்த சூட்சம ரகசியத்தை பின்பற்றி அனைவரும் பலன்பெறுங்கள்”. 

 

 

Next Story

குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமையில்லாமல் அவதிப்படுகிறீர்களா? - ஜோதிடர் தரும் எளிய பரிகாரம்

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், கணவன், மனைவி இடையேயான ஒற்றுமையை அதிகரிப்பதற்கான பரிகாரங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

“நிறைய குடும்பங்களில் கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை இல்லை. ஏதாவது ஒரு சண்டை, சச்சரவு இருந்துகொண்டே உள்ளது. இதற்கு என்ன காரணம்? ஒருவரது ஜாதகத்தில் இரண்டாம் இடமும், ஏழாவது இடமும் பலமிழந்து காணப்பட்டாலும், எட்டாம் இட அஷ்டம ஸ்தானம் கெட்டுப்போனாலும் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. பொதுவாக மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்; கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்பார்கள். சில நேரங்களில் கணவன், மனைவி பிரச்சனை நீதிமன்றம்வரை சென்றுவிடுகிறது. என்ன பரிகாரம் செய்தால் பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் அமைதி உண்டாகும் என்பதைப் பார்க்கலாம்.

 

குருவாயூர் கோவிலில் ராசலீலா என்ற நடனம் நடத்தப்படுகிறது. திருமண நாளில் அங்கு சர்க்கரை துலாபாரம் செலுத்தினால் குடும்பப்பிரச்சனை நீங்கும். மாங்கோட்டுகாவு என்ற இடத்தில் உள்ள பகவதி கோவிலில் இடைக்கலசம் என்ற பூஜையைச் செய்து அதை வீட்டில் வைத்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்தப் பரிகாரத்தால் பலரும் பலன்பெற்றுள்ளனர். 

 

வளர்பிறை பிரதோச காலத்தில் சிவன் கோவிலில் அம்மன் சந்நிதியில் தாலிக்கயிற்றை பூஜை செய்து திருமணமான பெண்களுக்கு பிரசாதமாக வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும். கும்பகோணம் அருகேயுள்ள திருசக்திமுற்றம் சென்று வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் சேர்வதற்குகூட வாய்ப்புகள் உருவாகும். 

 

திருப்பதி அலர்மேல் மங்கை தயாரின் திருமண கோலத்தை தரிசித்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். எந்த சிவன் கோவிலாக இருந்தாலும் இரவில் நடக்கும் பள்ளியறை பூஜையை ஒரு மாதம் தரிசித்தால் கணவன், மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

 

கேரளாவின் ஐயப்பன் கோவில், குருவாயூர் கோவிலில் ஐக்கிய மத்திய புஷ்பாஞ்சலி பூஜை நடைபெறும். அதில் கலந்துகொள்வதும் நல்ல பலனைத் தரும். அதேபோல, ரோஜா நிறத்தில் இருக்கும் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்தால் கணவன், மனைவி ஒற்றுமை அதிகமாகும். 

 

நான் மேற்கூறிய பரிகாரங்கள் அனைத்தும் பொதுவான பரிகாரங்கள். அவரவர் ஜாதகங்களை ஜோதிடரிம் கொடுத்து வேறு தோஷங்கள் ஏதேனும் இருந்தால் அதனையும் நீக்கிக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இல்லற வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி, கணவன், மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரித்து, குடும்ப ஒற்றுமை மேலோங்கும்”.