Advertisment

சேய்போல் காக்கும் கொரட்டூர் சீயாத்தம்மன்!

korattur seeyathamman temple

இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான மரங்களும், ஏழு கிராமங்களுக்கு தண்ணீர் தரும் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியும், நகர்ப்புறம் என்றும், கிராமம் என்றும் சொல்ல முடியாத இடத்திலிருக்கும் கொரட்டூரில் சீயாத்தம்மன் என்று சொல்லப்படும் சேய்காத்த அம்மனின் ஆலயம் உள்ளது.

Advertisment

சென்னை பாரிமுனையிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், கோயம்பேட்டிலிருந்து எட்டு கிலோமீட்டரிலும், கொரட்டூர் ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலும் பாடலாத்திரி சீயாத்தம்மன் திருத்தலம் அமைந்துள்ளது. எல்லா விஷயத்திற்கும் ஏற்றதென்று ஆன்மிகப் பெரியவர்கள் குறிப்பிடும் ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள ஆலயமாகும். இத்திருத்தலம் இரண்டு விமான கோபுரத்துடனும், ஐந்து கலசங்களுடனும், கொடி மரத்துடனும் காட்சியளிக்கிறது.

Advertisment

கோவிலின் சிறப்பு

முற்காலத்தில் இப்பகுதியில் சாதுக்கள், சந்நியாசிகள், ரிஷிகள் முதலியவர்கள் வாழ்ந்து வந்தனர். அப்போது அரக்கர்கள் தோன்றி சாது, சந்நியாசி, ரிஷிகளைக் கொடுமைப்படுத்தினர். அவர்கள் அனைவரும் பரமனிடம் வேண்டி நிற்க, பரமசிவன் அவர்களது கோரிக்கையை ஏற்று, பராசக்தியிடம் ‘அரக்கர்களை சம்ஹாரம் செய்து வா' என்று கட்டளையிட்டார்.

அம்பாள் புற்று உருவம் ஏற்றாள். அப்புற்றின் மீது பல தீய செயல்களை அரக்கர்கள் செய்ய, கோபத்தில் கண் சிவந்த அம்மையானவள் அந்த அரக்கர் குலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான அரக்கியின் வயிற்றைக் கிழித்து, குழந்தையை எடுத்துத் தன் காதில் குழையாக மாட்டிக்கொண்டு அரக்கர்களை வதம் செய்தாள்.

அக்காலத்தில் இராஜசிம்ம பல்லவ சக்கரவர்த்திக்கும், வாதாபி சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பாலாற்றில் யுத்தம் நடந்தது. அப்போது பல்லவ மன்னனின் சேனைகள் தோல்வியுற்றுக் கொண்டிருந்தன. அச்சமயம் மேற்கூறிய அனைத்தும் மன்னன் கனவில் தோன்றியது. விழித்தெழுந்த மன்னன், ‘போரில் நான் வெற்றி பெற்றால் அன்னைக்கு ஆலயம் எழுப்புவேன்' என்று வேண்டிக்கொண்டான். அவ்வாறே அன்னையின் அருளால் வெற்றி கண்டான். பின்பு சில அடியார்களின் உதவியால் அன்னை புற்று வடிவாய்த் தோன்றிய கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியைக் கண்டறிந்து ஆலயம் எழுப்பி அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டான் என்று தல வரலாறு கூறுகிறது.

தலப் பெருமை

கொரட்டூர் அக்ரஹாரம், தாதங்குப்பம், மாதனாங் குப்பம், சூரபேடு, கள்ளிக் குப்பம், கருக்கு, கச்சனாங்குப்பம் ஆகிய ஏழு கிராமங்களின் எல்லைக்கு சொந்தக்காரி இந்த அன்னை. எதிரில் யானை வாகனம் உள்ளது. சுயம்புவான அன்னையின் காதில் குழந்தை உள்ளது. அன்னையின் திருவடிகளின் கீழ் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாள் அருகில் சப்த மாதர்களான பிராம்மி, வைஷ்ணவி, கௌமாரி, மகேஷ்வரி, மாகேந்திரி, சாமுண்டி, வாராஹி உள்ளனர். மூலஸ்தானம் அருகில் சக்தி விநாயகர், பாலமுருகன் மற்றும் அண்ணன்மார்கள் சந்நிதியும், வடக்கே ஏரிக்கரை நாராயணி துர்க்கையும் காட்சி தருகின்றனர். தெற்கே பிரம்மாண்ட பிரதான மண்டபமும், நவகிரக சந்நிதியும் உள்ளன.

T

முக்கிய திருவிழா

இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையன்று விசேஷ அபிஷேக அலங்கார அர்ச்சனைகள் செய்யப்படும். அதற்கடுத்த ஞாயிற்றுக் கிழமையில் மேட்டுத்தெரு விநாயகர் கோவிலிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் குடங்கள் பக்தர்களால் எடுக்கப்பட்டு, அம்மனுக்கு பாலபிஷேகம் நடக்கும். பின்பு முருகனுக்கு சிவலிங்கபுர விநாயகர் கோவிலிலிருந்து வேல்தரிப்பு, ரங்கராட்டினம், கருட சேவையில் அம்மன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு மாலை அணிவித்தல், பல்வேறு வடிவமைப்பில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களின் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு எனப் புறப்பட்டு சீயாத்தம்மன் ஆலயம் சென்றடையும். சடல் சுற்றுதல், மிளகாய்த்தூள் அபிஷேகமும் நடைபெறும். மாலையில் தீமிதியும் மிகச் சிறப்பாக நடக்கும். வண்ண வாண வேடிக்கைகளும் நடைபெறும். ஐந்தாவது வெள்ளிக்கிழமையன்று திருவிளக்குப் பூஜையும் சிறப்பாக நடைபெற்று விழா இனிதே முடிவடையும். இவ்வாண்டும் இவ்விழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. கார்த்திகை மாதப் பௌர்ணமியில் திருவிளக்கேற்றி ஏரியில் விடுவார்கள். தைப்பொங்கலன்று 108 சங்கு அபிஷேகமும், மாலையில் மாட்டுவண்டி ஊர்வலமும் நடைபெறும். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை படையல் திருவிழா நடக்கும்; அம்மனின் தேர் திருவீதியுலா வரும்.

ஆலமரம்

இங்கு விழுதுகள் இல்லாத 150 வயதுடைய ஆலமரம் உள்ளது. அதன் கீழ் நாகாத்தம்மன், நாகராஜன், பால விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். திருமணமாகாதவர்கள், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், நோயுற்றவர்கள் என இன்னும் பல இன்னல் உடையவர்கள் அம்மனை மனமுருகி வேண்டி, ஒன்பது வாரம் கோவிலைச் சுற்றி வந்து வழிபட்டு 10 ஆவது வாரம் அம்மனிடம் எலுமிச்சைபழம் வாங்கிச் சென்றால் எல்லா இன்னல்களும் தீரும். சேய்காத்த சீயாத்தம்மனை நெஞ்சுருக வேண்டினால் எல்லா வளங்களும் நம்மை வந்து சேரும்.

aanmeegam temple
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe