Skip to main content

குடிப்பழக்கத்தைத் திருத்தும் கொஞ்சிக்குப்பம் வீரபத்திர அய்யனார்!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

 Konchikuppam Veerabhatra Ayyan who corrects drinking habits

 

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. ஆனால் அரசாங்கமே வருமானத்திற்காக மது விற்பனை செய்கிறது. இதனால் பலர் நிரந்தர குடிகாரர்களாக மாறி, லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிகின்றன. குடியினால் குடல் வெந்து நோய்களுக்கு ஆளாகி குடும்பத் தலைவர்கள் இறந்துபோவதால், விதவையான பெண்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. விதவைகள் மட்டுமே வாழும் பகுதிகளாக பல தமிழக கிராமங்கள் மாறிவருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் போதைக்கு ஆளாகி சீரழிகிறார்கள். இதற்குப் பெண்களும் விதிவிலக்கல்ல.

 

கோவில் திருவிழா, குடும்ப விசேஷங்கள் என எல்லா நிகழ்ச்சிகளிலும் மது விருந்துதான் களைகட்டி வருகிறது. நண்பர்கள் மட்டுமின்றி, மாமன், மைத்துனன், அண்ணன், தம்பி என்ற உறவுகள் கூட கூடிக் குடிக்கிறார்கள். குடும்பப் பிரச்சினை, கலவரம், தற்கொலை, எய்ட்ஸ் நோய் போன்றவற்றால் இறப்பவர்களைவிட மிக அதிக அளவில் மதுவினால் இறக்கிறார்கள். இதை உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. 

 

மதுவால் குடும்பச் சீரழிவும், பள்ளி, கல்லூரிப் பிள்ளைகளின் படிப்பும் பாழாகி வருகிறது. திறமையுள்ள பல மனிதர்கள் மதுவினால் அழிந்து போவதால் மனித வளம், உழைப்பு பாழாகிறது. இப்படி மது அரக்கனின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் தமிழக மக்களைக் காப்பாற்ற பல நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தும் போராடி வருகிறார்கள். மது இல்லா தமிழகத்தை உருவாக்க மதுவுக்கு எதிராகப் பலர் பல இயக்கங்களை உருவாக்கிப் போராடி வரும் நிலையில், தெய்வமும் தன் பங்கிற்குப் போராடி வருகிறது. ஆம்; தீராத மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டு வருகிறார்கள் கொஞ்சிக்குப்பம் அய்யனார், வீரபத்திரர் ஆகிய தெய்வங்கள்.

 

இவ்வாலயத்தில் பூரணி, பொற்கலையோடு அய்யனார் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாலயப் பூசாரி ஒருவர் குடிபோதைக்கு அடிமையான ஒருவரை அய்யனாரின் அனுமதியோடு வீரபத்திரசாமி முன்பு அமரவைத்து, "இனி குடிக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்யச்சொல்லி, சாமி முன்புள்ள சிவப்புக் கயிறை அவரது வலது கையில் கட்டிவிட்டார். அப்போது முதல் அந்த மனிதர் குடிப்பதையே மறந்துபோனாராம். இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவியது. அன்று முதல் கொஞ்சிக்குப்பம் அய்யனார், வீரபத்திர சாமிகள் புகழ் பரவ ஆரம்பித்தது.

 

இதுபற்றி கோவில் பரம்பரை அறங்காவலர் செல்வராசுவிடம் கேட்டோம். “ஒரு காலத்தில் கொஞ்சிமரங்கள் சூழ்ந்த காடாக இருந்துள்ளது இப்பகுதி. அந்தக் காட்டைத் திருத்தி எங்கள் முன்னோர்கள் இங்கு குடியேறியுள்ளனர். அதனால் ஊருக்கு கொஞ்சிக்குப்பம் என்று பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் எனது தந்தை அழகன் இக்கோவிலையும் இங்குள்ள விநாயகர், அய்யனார், வீரபத்திரர் மற்றும் பரிவார தெய்வங்களாக துர்க்கை, மாரியம்மன், முருகன் ஆகியோரைப் பிரதிஷ்டை செய்தார். ஊர்மக்கள் வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் வெளியூரிலிருந்தும் வந்து வழிபட ஆரம்பித்தனர். தற்போது ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பரம்பரை தர்மகர்த்தா வகையில் இப்போது நான் இருந்து வருகிறேன். இங்கு வரும் பக்தர்களுக்கு தினசரி மதியம் அன்னதானமும் வழங்கப்படுகிறது'' என்றார் அவர்.

 

 Konchikuppam Veerabhatra Ayyan who corrects drinking habits

 

கோவில் பூசாரி பார்த்தசாரதி, “இக்கோவில் தெய்வங்கள் சக்திமிக்கவை. அய்யனாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் கேட்டது கிடைக்கும்; நினைத்தது நடக்கும். மதுபோதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டுவர இங்குள்ள அய்யனாரின் முன்பு வணங்கி, பின்பு 50 ரூபாய் பணம் கட்டி ரசீது வாங்கிச் சென்று வீரபத்திரசாமிக்கு அர்ச்சனை செய்த பின்பு அவர்முன் அமர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும். ‘ஆகாயம், பூமாதேவி, வீரபத்திரசாமி சாட்சியாக என்னைப் பெற்ற தாய், தந்தை மீது சத்தியம் செய்கிறேன். இனிமேல் எப்போதும் குடிக்க மாட்டேன்' என்று மூன்று முறை உறுதிமொழி எடுத்து சத்தியம் செய்வார்கள். அதன்பிறகு அவர்கள் கையில் வீரபத்திரசாமியின் சிவப்புக் கயிறு கட்டப்படும். இப்படி கட்டிய பிறகு பெரும்பாலும் யாரும் குடிக்கமாட்டார்கள். அதையும் மீறி குடிப்பவர்கள் உடல்நிலை பாதிக்கப்படும். சில ஆயிரம் முதல் பல லட்சம்வரை செலவு செய்ய நேரிடுகிறது. இதை அனுபவப்பூர்வமாகப் பார்த்தவர்கள் மீண்டும் குடிப்பதில்லை. இங்கு வந்து கயிறு கட்டிய பிறகு மதுவை மறந்து நல்ல முறையில் வாழ்கிறார்கள். இப்படி பல்லாயிரம் குடும்பங்கள் நிம்மதி அடைந்துள்ளன. இதன் பலனை அறிந்தவர்கள் மற்றவர்களிடம் சொல்ல, தினசரி சுமார் 200 பேருக்கு மேல் கயிறுகட்ட இங்கு வந்தவண்ணம் உள்ளனர். காலை முதல் மாலை வரை எல்லா நாட்களிலுமே கோவில் திறந்திருக்கும்.

 

மதுப்பழக்கத்தைத் தடுப்பதோடு, இங்கு வந்து வணங்குகிறவர்களுக்கு திருமணத்தடை நீக்கம், குழந்தைப் பேறு, திருட்டுப்போன பொருட்கள் கிடைத்தல் என அனைத்தும் நிறைவேறுகின்றன. உதாரணமாக, அன்னவயல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்குத் திருமணமாகி இருபது ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இங்கு வந்து வேண்டுதல் செய்த பிறகு குழந்தை பிறந்துள்ளது. நெய்வேலி டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த என்.எல்.சி ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை திருட்டுப்போனது. இங்கு வந்த பிறகு சில நாட்களுக்குள் அந்த நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. பல்வேறு ஆண், பெண்களுக்குத் திருமணத்தடை நீங்கி திருமணம் நடந்துள்ளது. எங்கள் கொஞ்சிக்குப்பம் அய்யனார், வீரபத்திர சாமிகளின் பெருமை தமிழக அளவில் பரவியுள்ளது என்பதற்கு தினசரி சென்னை உட்பட பல மாவட்ட மக்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்வதே சாட்சி'' என்கிறார்.

 

"பலரது உடல்நிலை பாதிப்பதோடு இறப்பதும், குடும்பங்கள் சீரழிவதும், பல குற்றங்கள் நடப்பதும் மதுவினால் தான். மனிதனால் மாற்ற முடியாத அந்தப் பழக்கத்தை தெய்வம் மாற்றுகிறது” என்று மெய்சிலிர்ப்போடு பேசுகிறார்கள் ஊர்மக்கள். அமைவிடம்: மதுவுக்கு அடிமையானவர்களை மீட்கும் அய்யனார் ஆலயம் விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், பண்ருட்டிக்கு தெற்கே 11 கிலோமீட்டரிலும், வடலூருக்கு வடக்கே 13 கிலோமீட்டரிலும் சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

 

 

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.