Karur Temple festival

Advertisment

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை நிறைவேற்றும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது.

முன்னதாக ஆடி 18 அன்று இரவு மகாதானபுரம் காவிரி ஆற்றில் பூசாரி கத்தி வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆடி 19 காலை சுவாமி மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் பரிவார தெய்வங்களுடன் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தார். பின்னர் சுவாமி மகாலட்சுமிக்கு பரம்பரை பூசாரி ஆணி கால் அணிந்து சிறப்பு பூஜைகள் செய்தார். பின்பு கோவில் கொடி மரத்தில் விளக்கு ஏற்றப்பட்டு கருடன் வட்டமிட்டதை தொடர்ந்து ஏழு பூசாரிகளும் ஒன்றாக கோவிலை வலம் வந்தனர். அதன்பிறகு பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா வெளிமாநிலத்தைச்சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.