Advertisment

சூலம் ஏந்தி சூலியான கொற்றவை! - அடிகளார் மு.அருளானந்தம்

sooli

Advertisment

ஆதித்தமிழர்கள் கொற்றவையை, கானகத்தில் உலா வரக்கூடிய- அக்கானகத்தை ஆட்சி செய்யக்கூடிய தெய்வமாகக் கருதிவந்தனர். அவளை கானமா செல்வி என்றும், காடு கிழாள் என்றும், பழையோள் பெருங்காட்டுக் கொற்றி எனவும் குறிப்பிட்டு வழிபட்டனர்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், அக்காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்தது என்பதனை வேட்டுவ வரியில் அழகாகக் கூறியிருக்கின்றார். அதில், அவளது ஆடை, அணிகலன்கள், கைகளில் இருந்த சின்னங்கள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். அதேசமயம், ஆகோள் என்று அழைக்கப்பட்ட- அதாவது பசுக் கூட்டங்களை எதிரி நாட்டி-லிருந்து கவர்ந்து வரும் போரினைச் செய்பவர்களை மழவர்கள் எனப் பெயரிட்டு அழைத்தனர்.

கன்றுகள் மீதுள்ள பாசத்தால் பசுக்கள் பின்னே ஓடும்!

இவர்கள் சில நேரங்களில் ஆரலைக் கள்வர்களாகவும் செயல்படுவார்கள். இவர்கள் செய்யும் போர் முறைக்கு கோட்டப்போர் என்று பெயர். கோட்டப்போர் என்றால், எதிரி நாட்டில் இரவு நேரங்களில் ஆநிரைகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகளை, மாடுகளின் சாணத்தினால் பொதியச் செய்வார்கள். ஏனெனில், மாட்டுக் கூட்டங்களை விரட்டிச் செல்லும்போது அவற்றின் கழுத்தில் அணிந்திருக்கும் மணிகளிலி-ருந்து ஓசை எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, சாணத்தை வைத்து மணியை அடைப்பார்கள்.

Advertisment

ஈன்ற கன்றுகளுக்கு, வாக்கூடு என்ற ஒரு கூட்டை வாயில் அடைத்து, கத்தவிடாமல் செய்வார்கள். வாக்கூடு போட்ட கன்றுகளைத் தங்கள் கழுத்தில் போட்டுக்கொண்டு, அவற்றை ஈன்ற பசுக்களுக்கு முன்னே ஓடுவார்கள். அக் கன்றுகள்மீதுள்ள பாசத்தினால், ஈன்ற பசுக்கள் அவர்கள் பின்னே ஓடும். அவற்றைத் தொடர்ந்து, ஈனாத கெடரி மாடுகளும் காளை களும் ஓடிவரும். இவ்வாறு, மாடுகளை ஓட்டிச் செல்லும்போது, அம்மாட்டுக் கூட்டங்களைச் சுற்றி மழவர்கள் வட்ட வடிவமாகச் சூழ்ந்து ஓடுவார்கள். ஏனெனில், பின்னால் பக்கவாட்டில் எதிரிகள் வந்து பசுக்களைப் பார்த்து விடக்கூடாது; அவற்றைத் தடுத்துவிடக்கூடாது என எல்லா திசைகளிலும் எச்சரிக்கையாக இருந்து, வட்ட வடிவத்தில் சூழ்ந்து கவர்ந்து செல்வார்கள். இப்போர், கோட்டப் போர் என்றழைக்கப் பட்டது.

அணையவிடாத கோட்டக்காளை!

கோட்டம் என்றால் வட்ட வடிவம். நல்ல வீரனை, அந்தக் காலத்தில் கோட்டக் காளை என்றழைப்பார்கள். எதனா லென்றால், தை மாத உழவர் திருநாளில் பெரிய அளவில் வட்ட வடிவமாகவேலி அமைத்து, அதற்கு நடுவே எருதுக்காளையை விட்டு, சூழ்ந்து நின்று அதனை அணைய முற்படுவார்கள். அவர்கள் எவரையும் அணையவிடாமல், வீரத்துடன், செருக்குடன் நிற்கும் காளையே கோட்டக்காளை ஆகும். அந்தக்காளை அளவிற்கு வீரமானவன் என்பதைக் குறிப்பதற்காக, கோட்டக்காளை என அழைப்பதுண்டு. இவ்வாறு சாமர்த்தியமாக, சத்தமில்லாமல் நிரைகள் நிற்கும் குறும்புகளுக்குள் புகுந்து கொள்ளையடித்துச் செல்லும்பொழுது, விடிந்துவிட்டபின் நிரைகள் காணாமல் போனதை அறிந்து, அவற்றை மீட்டுக் கொண்டு வருவதற்குச் செல்லும் வீரர்கள் மறவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

உண்டாட்டு விழாவில் கள்ளுண்டு மகிழும் மன்னன்!

மழவர்கள் வெற்றியுடன் பசுக்கூட்டங் களைக் கவர்ந்து வந்துவிட்டால், அதை ஒரு விழாவாகக் கொண்டாடுவார்கள்.

அவ்விழாவிற்கு, "உண்டாட்டு விழா' எனப் பெயரிட்டனர். இந்த உண்டாட்டு விழாவில் மழவர்கள், தங்களுடைய தெய்வமான கொற்றவைக்கு கொழுத்த ஆவினைப் பலி-யிட்டுப் படைத்த உணவினை உண்டு தேறலைக் குடித்து மகிழ்வார்கள். அப்போது மன்னனும் சேர்ந்து அவர்களோடு கள்ளுண்டு மகிழ்வான். மன்னன் மழவர்களுக்கு நிலங்களைத் தானங்கொடுத்துப் பூரிப்பான். இம்மழவர்கள், பகல்வேளையில் ஆநிரை யைக் கவரும்போதும், ஆறலைத் தொழிலாகிய வழிப்பறித் தொழி-லில் ஈடுபடும்போதும், தங்கள் கைகளிலும் கால்களிலும் பித்திப் பூவால் "சல்லடம்' என்ற வட்ட வடிவ மாலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டு, பெருவழிப்பாதைகளில் பயணியர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பர்.

மறவர்கள் வெற்றியடைந்தால் பிள்ளையாட்டு விழா!

வேட்டை வெற்றிபெற்றால், அதே சல்லடங்களைத் தங்கள் வீட்டுக் கன்னிப் பெண்களுக்குச் சூட்டி, கொற்றவையாக அலங்கரித்து, அன்றிரவு உண்டாட்டு விழா கொண்டாடுவார்கள். அதேசமயம், மழவர்களால் ஆநிரை கவரப்படும்போது, அதை எதிர்த்துப் போராடும் மறவர்கள் வெற்றியடைந்தால், அவர்கள் "பிள்ளை யாட்டு' விழா கொண்டாடுவார்கள். இந்த விழாவானது, தாயைப் பிரிந்த கன்றுகளிடம், அவற்றின் தாயைச் சேர்த்து மகிழ்வதைக் கொண்டாடும்விதமாக இருக்கும். இவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பல்லவை கட்டி, பாலண்ணம் படைய-லிட்டுக் கொண்டாடுவார்கள். இங்கு "பல்லவை' என்பது, குழந்தைகளின் கொண்டையி-லிருந்து உடல் முழுவதும் பலவகை அலங்காரம் செய்து மகிழ்ந்து கொண்டாடு வதாகும். சங்கப்பாடல்கள் இதனை, "நாடவற்களித்த பிள்ளையாட்டு விழா' எனக் குறிப்பிடுகின்றன. பசு கவர்தலை வெட்சித்திணை என்றும், ஆநிரைகள் மீட்டெடுத்தலை கரந்தைத்திணை எனவும் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுகல்லைத் தவிர வேறு தெய்வம் இருந்ததில்லை!

மழவர்கள், ஓரிடத்தில் தங்கி வாழாத நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். மறவர்கள், நிலையாக ஓரிடத்தில் வாழ்ந்து ஆநிரை வளர்க்கும் தொழில் செய்தவர்களாயிருந்தனர். ஆநிரைப் போரை வெட்சிப்பூசல் என்றும் அழைப்பர். வெட்சிப்பூச-லின் பொழுது, ஆநிரைகளைக் கடும் போரிட்டு மீட்டவர்களை "கரந்தையர்', "ஆடவர்', "கறுகண்ணாளர்' எனப் பெருமையோடு அழைப்பர்.

முக்கியமாக, கரந்தை வீரர்கள் இறந் தால் மட்டுமே நடுகல் எடுக்கப்படும். வெட்சி வீரர்கள் இறந்தால் நடுகல் எடுக்கும் வழக்கமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மழவர்களை, புலவர்கள் வீரர்களாக மதிக்க மாட்டார்கள். இன்றைய கூலிப்படைபோல, நாடோடி வாழ்க்கை வாழும்போது, அவர்கள் செல்லும் அந்தந்தப் பகுதிகளிலுள்ள மன்னர்களிடம் பொருள் பெற்றுக் கொண்டு, ஆநிரை கவரும் செயலைத் தொழிலாக உடையவர்கள். முதன்முதலி-ல் நடுகல்-லில் புடைப்புச் சிற்பமாக செய்யப்பட்டது, கரந்தை வீரர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். இதற்கு, "நாடா நெடுங்கல்' அல்லது "பல்பெயர் மன்னி' எனப் பெயர். இதனருகினில் யாராவது கடந்துசெல்ல நேர்ந்தால், மிகுந்த மரியாதையோடு வணங்கிச் செல்வது, அன்றைய கால வழக்கமாக இருந்துவந்தது.

புறநானூற்றுப் பாடலில்களில் வெட்சித் திணையைவிட கரந்தைத்திணைப் பாடல்களே அதிகம். இதற்குக் காரணம், ஆநிரை கவர்தலை ஒரு கேவலமான செயலாகக் கருதியதே ஆகும். கரந்தை வீரனின் நடுகல்லை நீராட்டி, மயில்லி சூட்டி நெய்விளக்கேற்றி வணங்குவதும், ஒரு ஊருக்குள் வரும் விருந்தினர்களை, நடுகல் இருக்கும் இடத்திற்கு வந்து வணங்கி விருந்தெதிர் கொள்ளுதலும் அன்றைய பண்பாடாக இருந்துவந்துள்ளது. எனவே, முல்லைநில மக்களுக்கு இந்நடுகல்லைத் தவிர வேறு தெய்வம் இருந்ததில்லை என்பதும் ஒரு காலத்து மரபாக இருந்தது. பெரும்போர் நடக்கும்போது கோட்டைச்சுவரைக் காக்க ஏற்படும் போருக்கு உழிஞைத் திணை என்று பெயர். இப்போரில் வெற்றியடைந் தோரின் வெற்றிக்கு, கொற்றவையின் அருளே காரணம் என்று நம்பிவந்தனர் பழந்தமிழர்கள். எனவே, கொற்றவையின் பெரும் சிலையின்மீது தங்களது போர் ஆயுதங்களை வைத்து வணங்குவர்.

வெற்றிக் காணிக்கையாக உயிர் பலி!

கொற்றவை போர் தெய்வமாக மாற்றப் பட்டபின், அதன் கைகளில் சூலாயுதத்தை நிரந்தரமாக வைத்து வணங்கத் தொடங்கினர்.

அதனால்தான் பிற்காலத்தில் அவள், சூலம் ஏந்திய "சூலி' என்றாகி வழிபடப் பட்டாள். வெற்றிபெற்றதன் காணிக்கையாக, வீரர்கள் தங்கள் உயிரையே "சூலி' முன் பலியிட்டு, வெறியாட்டு வழிபாடு செய்யும் வழக்கமும் பின்னாளில் உருவானது.

இந்நிகழ்வே, தற்போதும்கூட ஏதாவது ஒரு உயிரைக் கொற்றவைக்கு பலியிட்டால், தாம் மேற்கொள்ளும் காரியங் களில் வெற்றி நிச்சயம் எனும் நம்பிக்கை யுடன் வழிபடும் பழக்கம் உருவாகக் காரணமாக அமைந்தது. கொற்றவையிடம் சூலம் மட்டுமின்றி, நெடுவேல், வாள், வில் போன்ற போர்க்கருவிகளையும் வைத்து வழிபடும் புதிய பழக்கமும் உருவானது.

சிலப்பதிகாரம், வேட்டுவரி என்ற பகுதியில் பின்வருமாறு விளக்குகிறது. இதில், புகார் நகரில் தங்கள் மன்னர் பெற்ற வெற்றிக்காக குருதிக் காணிக்கை கொடுக்க, மறவர் இனம் தங்கள் குலத்து குமரிப்பெண்ணை கொற்றவையாக அலங்கரித்து, அவளை கலைமானின் முதுகில் அமரவைத்து, வண்ணக் குழம்பு, சுண்ணச்சாந்து சந்தனம், எள்ளுருண்டைச் சோறு, பூ, மணப் பொருள்களை அவள்முன் படைத்து. அவளைத் தொட்டு வணங்கி, தாரை முழக்கங்களோடு பலி பீடிகையில் பலி மேற்கொண்டனர் என்பது, வேட்டுவ வரி 21 முதல் 43 வரையிலும் விளக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்

god SPIRITUAL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe