Skip to main content

ஒருவரின் தலைமுடியைப் பார்த்தே ஜாதகம் ...

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும் 2-க்கு அதிபதியும் சரியில்லையென்றால், அவருடைய முகத்தில் பிரகாசம் இருக்காது. தலையில் முடி சரியாக இருக்காது. சிலரின் தலையில் முடி உதிர்ந்துவிடும். சிலருக்கு வழுக்கை விழுந்துவிடும். அதனால் இளம்வயதிலேயே வயதான மனிதர்களைப்போல காட்சியளிப்பார்கள்.ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி, லக்னத்தில் பாவ கிரகத்துடன் இருந்து, புதன் அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், அவரின் தலையில் முடி குறைவாகவே இருக்கும். இளம்வயதிலேயே வழுக்கை விழுந்துவிடும். பொடுகுவரும். ஜாதகத்தில் லக்னாதிபதி விரய ஸ்தானத்தில் இருந்து, அந்த லக்னாதிபதியுடன் சூரியன் இருந்தால், அவருடைய தலையின் முன்பகுதியில் முடி உதிர்ந்துவிடும். லக்னாதிபதி, சூரியன், செவ்வாய் 12-ல் இருந்தால், அவருடைய தலைமுடி சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டே இருக்கும். சற்று வயதானபிறகு, பின்பகுதியில் மட்டும் முடி இருக்கும். முன்பகுதியில் வழுக்கை விழுந்துவிடும்.
 

hproscope image

ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதியான சந்திரன் விரய ஸ்தானத்தில் இருந்து, 6-ல் சூரியன் இருந்தால், அவருக்கு நாளாக நாளாக முடி கொட்டிக்கொண்டே இருக்கும். ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாக லக்னத்திலோ விரய ஸ்தானத்திலோ இருந்தால், அவருக்கு சிறிதுசிறிதாக முடி உதிர்ந்துகொண்டேயிருக்கும். லக்னத்தில் சூரியன், புதன், சந்திரன் இருந்து, விரய ஸ்தானாதிபதி 2-ல் இருந்தால், அவருக்கு இளம்வயதிலேயே தலைமுடி கொட்டத் தொடங்கிவிடும். லக்னத்தில் சூரியன், புதன் இருந்து, அதில் புதன் நீசமாக இருந்தாலும், விரய ஸ்தானத்தில் சுக்கிரன் இருந்தாலும் அவருக்கு இளம்வயதிலேயே முடி உதிரும். ஜாதகத்தில் புதன், செவ்வாய், சனி 6 அல்லது 12-ல் இருந்தால், அவருக்கு வயது ஆக ஆக முடி உதிரும். ஜாதகத்தில் 12-ல் செவ்வாய், லக்னத்தில் சனி, 2-ல் சூரியன் இருந்தாலும் இளம்வயதிலேயே தலைமுடி உதிரும்.

சந்திரனுக்கு 12-ல் சூரியன், புதன், 2-ல் பாவ கிரகம் இருந்தால், அவருக்கு இளம்வயதிலேயே தலைமுடி கொட்டும்.லக்னத்தில் சூரியன், புதன் அல்லது சூரியன், சுக்கிரன், 12-ல் செவ்வாய் இருந்தால், 22 வயதிற்குப் பிறகு தலைமுடி உதிரும். ஏனென்றால், அவர் உணவில் காரம் அதிகமாகச் சேர்த்திருப்பார். அதனால் வயிற்றில் உஷ்ணம் அதிகமாகி தலைமுடி கொட்டும். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு 12-ல் சனி- ராகு அல்லது சனி- கேது இருந்தால், அந்த சந்திரனுக்கு 2-ஆவது வீட்டில் செவ்வாய் இருந்தால் இளம்வயதிலேயே தலைமுடி உதிரும். லக்னாதிபதியும், விரய ஸ்தானாதிபதியும் செவ்வாய், சூரியனுடன் இருந்தால் அல்லது செவ்வாய், சூரியனால் பார்க்கப்பட்டால் அவருக்கு தலைமுடி கொட்டும். ஒருவரின் தலைமுடியைப் பார்த்தே அவரின் ஜாதகத்திலிருக்கும் புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் நிலைமையைக் கூறிவிடலாம். இந்த இரு கிரகங்களும் எப்போது கெட்டுப்போயிருக்கின்றனவோ, அப்போது அவருடைய தலைமுடிக்குப் பிரச்சினை உண்டாகிவிடும். ஒரு மனிதரின் வயிற்றில் வெப்பம் அதிகமாக இருந்தால் அவருடைய தலையிலிருந்து முடி உதிரும்.

பரிகாரங்கள்

1.தினமும் தலையில் தேங்காய் எண்ணெய் தேய்க்கவேண்டும். அல்லது "ப்ரிங்க்ராஜ்' எண்ணெய்யை காலை, இரவு வேளைகளில் தேய்க்கலாம்.
2.உணவில் சூடான பொருட்களைக் குறைக்கவேண்டும். ஊறுகாய், அப்பளம், புளி, காரம் ஆகியவற்றை குறைவாக சாப்பிட வேண்டும். இவை பித்தத்தை உண்டாக்கக்கூடியவை.
3.கிழக்கிலோ அல்லது தெற்கிலோ தலைவைத்துப் படுப்பது நல்லது.
4.தினமும் சூரியனுக்கு நீரில் பன்னீர் (ரோஸ் வாட்டர்) கலந்து விடவேண்டும்.
5.பச்சைக்கல் மோதிரம் (மரகதம்) அணிவது நல்லது.
6.ஞாயிற்றுக்கிழமை தலையில் எண்ணெய் தேய்க்கக்கூடாது. முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். அல்லது அமாவாசையன்று காகம், நாய், பசுவுக்கு உணவளிக்க வேண்டும்.தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.
7.உணவில் தயிர், மோர் சேர்த்துக்கொள்வது அவசியம்.

Next Story

ஆன்மீக பயணத்தை தொடங்கிய அதிமுகவினர் (படங்கள்)  

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதிமுகவின் எம்.ஜி.ஆர்  இளைஞர் அணி சார்பில், இளைஞர் அணி இணைச் செயலாளர் சுனில் தலைமையில் 34 பேர் இன்று (22.04.2023) காலை 8 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள குக்கி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆன்மீக பயணத்தை தொடங்கி உள்ளனர். 

 

 

Next Story

சனி பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி? சித்தர் கூறும் பரிகாரங்கள் - பொ. பாலாஜி கணேஷ்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

Lord Shani Spirituality

 

சனி கிரகத்தின் பாதிப்பிலிருந்து தப்பிக்க சித்தர் ஒருவர் கூறிய எளிய பரிகாரத்தை இங்கு காணலாம்.

 

பச்சரிசியை நன்கு பொடி செய்து அதை ஒரு கையில் வைத்துக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, பின்னர் விநாயகரை வணங்கி மூன்று முறை வலம் வரவேண்டும். அதன் பின் கையிலுள்ள அரிசியைத் தரையில் போடவேண்டும். அதை எறும்புகள் எடுத்துச் செல்லும். அப்படி எடுத்துச் சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவிலென்றால் அது கூடுதல் சிறப்பு. சனிக்கிழமைகளில் இதைச் செய்யவேண்டும்.

 

பச்சரிசி மாவை எறும்புகள் மழைக் காலத்துக்காக சேமித்து வைத்துக்கொள்ளும். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்து முக்கோடி தேவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கொருமுறை சனிக் கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்துவிடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாகப் போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன்மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்தப் பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனி பகவான் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

 

ஒருவருக்கு சனி திசை வந்துவிட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்பமாட்டார்கள். அஷ்டமத்துச் சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மைச் சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சனைகளை உருவாக்கிவிடும். இதற்கு செய்யவேண்டிய பரிகாரம் வருமாறு:

 

தேவையில்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக்கொள்ளும் பக்குவம் வேண்டும். சனிக்கிழமைகளில் எள்ளெண்ணெய் தீபமேற்றுவது அவசியம். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுவது நன்று. பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி திசை நடக்கும்போது எந்த செயலும் தாமதமாகும். அதற்காகக் கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்ளவேண்டும். இப்படி நம்மை மாற்றிக்கொண்டால் சனி பாதிப்பிலிருந்து சற்று தப்பிக்கலாம்.

 

தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய்யில் தீபமேற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம். வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வழிபடவும். சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

 

தினமும் விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபடலாம். அனுமன் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளைக் குறைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம். தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கலாம். ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம். கோமாதா பூஜை நன்று.

 

ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். சனிப் பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். சித்தர்களின் ஜீவ சமாதி பீடங்களுக்குச் சென்று வழிபடலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள். வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனி பகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகிவிடும்.

 

பிரதோஷ காலத்தில் சிவ பெருமானுக்கு வில்வ இலை சமர்ப்பித்து வணங்க வேண்டும். தினமும் ராமநாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையிருந்து தப்பிக்கலாம். லக்னத்தில் சனி அமர்ந்து உடல் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்குப் பரிகாரமாக சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இலவசமாகக் கொடுக்கலாம்.

 

சனி இரண்டில் இருந்தால் நெற்றியில் எள்ளெண்ணெய் தேய்த்தல் கூடாது. சனி மூன்றில் இருந்தால் வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணிகளை இருக்கச் செய்யவும். சனி நான்கில் இருந்தால் கறுப்பு ஆடைகள், கொள்ளு ( தானியம்) தானம் செய்யலாம். சனி ஐந்தில் இருந்தால் வீட்டின் மேற்கு பாகத்தில் செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும். சனி 6-ல் இருந்தால் 40-க்கு மேல் 48 வயதிற்குட்பட்ட காலத்தில் வீடு கட்டுதல் கூடாது. சனி 7-ல் இருந்தால் கருப்பு நிறப் பசுவுக்குப் புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசல் பூமியினுள் மூடி வைப்பதுவும் போதுமானது. சனி 8-ல் இருந்தால் கல்லில் அல்லது மரப் பலகை நாற்காலியில் அமர்ந்து தண்ணீரில் ஒரு ஸ்பூன் பாலைக் கலந்து குளித்தல் சிறப்பானது. சனி 9-ல் இருந்தால் வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது. சனி 10-ல் இருந்தால் பார்வையில்லாதோர் பத்து பேருக்கு உங்களால் இயன்ற தானம் செய்யலாம். சனி 11-ல் இருந்தால் வீட்டை நீண்டநாள் பூட்டிச் செல்லும்போது வீட்டு வாசலில் சிறு குடத்தில் தண்ணீரை வைத்துச் செல்வது தீமையை அகற்றும். சனி 12-ல் இருந்தால், வீட்டின் கடைசி இருட்டறையில் பன்னிரண்டு பாதாம் பருப்பை கறுப்புத் துணியில் முடிந்து வைப்பது நன்மை தரும்.


ஏழரைச் சனி நீங்கும்போது அந்த ராசிக்காரர்கள் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த் தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டிலுள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணெய்யைத் தலையில் வைத்துக் குளிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவ தரிசனம் செய்யவேண்டும். இயன்றவர்கள் நவ கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் சிறப்பு.


சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும், தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும், அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும்பொழுது, ‘சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டார்’ என்று புலம்புவதுண்டு. அது கடந்த ஜென்மத்துப் பாவங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்தால் சனியின் தாக்கம் குறையுமென்று அருளாளர்கள் கூறுவர். சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக்கொண்டுதான் இருப்பார். அவரது நேரடிப் பார்வையின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியாதென்பதால்தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.


ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, ஜென்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும்போது கெடுபலன்கள் நடக்க வாய்ப்புண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்கவேண்டும். உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனியன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபமேற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ வைத்துத் தூங்கி விடிந்த பின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்கவேண்டும். சனி பகவான் கால் ஊனமுற்றவர் ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிரன்னம் அளிப்பது மிகவும் நல்லது. கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.