Advertisment

பக்தர்களுக்குத் தடை! அடிவாரத்தில் வழிபட்டு செல்லும் முருக பக்தர்கள்!

Ban on devotees! Murugan devotees worshiping at the foothills!

Advertisment

தமிழகத்தில் கரோனா மீண்டும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டு தலங்களில் மக்கள் ஒன்றாக சேர்ந்து வழிபட தடை விதித்துள்ளது. வருகிற 30ஆம் தேதி வரை இந்த தடை இருக்கும் என்றும், கோயில்களின் தினசரி பூஜைகளை கோயில் ஊழியர்கள் செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும்மக்கள் அனுமதி தடை செய்யப்பட்டு, பூஜைகள் மட்டும் நடந்துவருகிறது.

இந்தநிலையில், ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி, கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக காவடி எடுத்தும், தீர்த்தக் கலசம் எடுத்தும் வருகை தருவார்கள். ஆனால், அரசின் வழிகாட்டுதல் படி தற்போது கரோனா காரணமாக பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகிய பகுதிகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், பழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடனுடன் வந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே முக்கிய நாட்களில் மட்டும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

அதேபோல், நேற்று (26.04.2021) சித்ரா பவுர்ணமி நாள் என்பதால் பழனி கோவிலுக்கு அதிகமாக முருக பக்தர்கள் வந்தனர். அவர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபட்டுச் சென்றனர். மேலும் அங்கேயே தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி செல்கிறார்கள். இதனால்தினசரி அடிவாரப் பகுதியில் காலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

corona virus palani murugan temple pazhani
இதையும் படியுங்கள்
Subscribe