கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவிலில் பல்வேறு பூஜைகள், பஞ்சமூர்த்தி வீதி உலா உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வந்தது.இந்நிலையில் ஜூலை 1ஆம் தேதி ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அதேபோல் ஜூலை 2ஆம் தேதி ஆணி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்றது. இந்த தரிசன விழாவையொட்டி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு மகா அபிஷேகம், சொர்ண அபிஷேகம், புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் சிற்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சியும் நடைபெற்றது. இதைனை காண்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தரிசனம் மற்றும் தேர் திருவிழா குறித்து தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம் என் ராதா மாவட்ட ஆட்சியருக்கு புகார் ஒன்று அனுப்பியுள்ளார். அதில்உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை மற்றும் இரவில் கருவறையில் இருந்து தேருக்கும், தேரில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கும் சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் நடராஜராஜா மூர்த்தியை கிழக்குப்புற வாயில் வழியாக ஊர்வலமாக தூக்கி செல்கின்ற போது வழி நெடுக பக்தர்கள் தீப ஆராதனை எடுத்து வணங்குவது வழக்கம். இந்த நடைமுறை பல நூற்றாண்டுகாலமாக இருந்து வருகிறது.
கிழக்கு கோபுர வாயில் அருகே வலது இடது புறத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட காத்திருந்தனர். நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் சுவாமியை வலது புறத்தை மட்டும் துணியால் மறைத்து ஊர்வலமாக பொது தீட்சிதர்கள் எடுத்துச் சென்றனர். இதனால் சுவாமியை வழிபடுவதற்காக காத்திருந்த பக்தர்கள் மிக மிகவும் வேதனை அடைந்தனர். துணியைக் காட்டி சுவாமி மறைத்து தூக்கி சென்ற நடைமுறை பக்தர்கள் வழிபாட்டு முறையை தடுப்பதாகும் இது பதஞ்சலி மாமுனிவர் வகுத்து தந்து ஆகம விதிகளுக்கு புறம்பானது. பல நூற்றாண்டு காலமாக இல்லாத புதிய நடைமுறையை கொண்டுவதற்கு பொது தீட்சிதர்கள் நிர்வாகத்திற்குக்கு உரிமை இல்லை.
இனி வரும் காலங்களில் நடைபெற உள்ள மார்கழி திருமஞ்சனத்தின் போது பல நூற்றாண்டு காலமாக இருந்து வரும் நடைமுறையை பின்பற்றி சுவாமியை வலது புறம் மட்டும் துணியால் மறைத்து தூக்கி செல்லும் நடைமுறையை கைவிட்டு பக்தர்கள் வழிபட பொது தீட்சிதர்கள் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் துறை எஸ் பி இந்து சமய அறநிலைத்துறை விசாரித்து மேற்கண்ட நிகழ்வு தொடராமல் பக்தர்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.