Skip to main content

அமாவாசை - பௌர்ணமி; எண்ணெய் பலன்கள் - வீட்டு பூஜை குறிப்புகள்: 01

Published on 11/02/2023 | Edited on 13/02/2023

 

 Amavasai - full moon; Benefits of Oil - Home Pooja Tips : 1

 

*தினமும் காலையும் மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது உங்கள் விருப்பமான கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

 

*தினமும் காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை: கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல மலர்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

 

*வீட்டின் கிழக்கு பக்கம் துளசி செடி, வேப்பமரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

 

*வீடுகளில் பூஜையறை என்று தனியாக இருந்தால், அங்கு தேவையில்லாத உடைந்த பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். இது இறைசக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மிக அதிர்வுகள் ஏற்படாது. மிகக்குறைந்த பூஜைக்கான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

 

*சிவன், பார்வதி, விநாயகர், முருகன் உள்ள படம் ஒன்றை கிழக்கு பார்த்து மாட்டிவைத்தால், அது வீட்டிலுள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது  சிறிதாக நீக்கும்.

 

*செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் பூஜையறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரையாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். 

 

*நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

 

*அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

 

*அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, ஜென்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.

 

*பொதுவாக நெற்றிக்குத் திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

 

*பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையைச் சொரிதல் ஆகாது.

*கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்குமிடத்தில் இருக்கவும் வேண்டாம்.

 

*சாமி படங்களுக்கு வாசனையில்லாத பூக்களை சூட்டக்கூடாது.

 

*வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்கவேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

 

*வீட்டுப் பூஜையில் கற்பூரதீபம் தானே குளிர்ந்துவிடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

 

*அதிகாலை நான்கரை மணிமுதல் ஆறு மணிக்குள்ளும், மாலை ஐந்தரை மணிமுதல் ஆறு மணிக்குள்ளும் தீபமேற்றுவதால் நிறைவான வளமும் பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜையறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

 

*நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்தும் கலந்து 48 நாட்கள் விளக்கேற்றிப் பூஜை செய்தால் தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

 

*ஏற்றிய விளக்கிலிருந்து கற்பூரத்தையோ ஊதுவத்தியையோ ஏற்றக்கூடாது.

 

*விளக்கேற்றும்போது மற்றவர்கள் ஏற்றிவைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாகத்தான் விளக்கேற்ற வேண்டும்.

 

* "ஓம்' என்னும் மந்திரத்தை, பூஜையறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால், அவரை எப்பேற்பட்ட வினைப்பயனும் வியாதியும் நெருங்காது.

 

*வீட்டில் பூஜையறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தைச் சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.

 

*சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக்கூடாது.

 

*ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

 

*நாம் வீட்டில் கடவுளை வணங்கும் போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடிதான் தொழுதல் வேண்டும்.

 

*யாராவது தூங்கிக்கொண்டிருக்கும் போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக் கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

 

 

Next Story

குபேர வாழ்வருளும் குடமுழுக்கு தரிசனம்!

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

 A vision of the life of Kubera!

 

எங்கே தெய்வம் இருக்கிறதோ அங்கே அருள் இருக்கிறது. தெய்வம் இருக்குமிடமே கோவில். ஊரென்று ஒன்றிருந்தால் அங்கே கோவிலென்று ஒன்றிருக்க வேண்டும்."கோ' என்றால் இறைவன். "இல்' என்றால் இல்லம். அதாவது இறைவன் குடிகொண்டிருக்குமிடமே "கோவில்' என்பதாகும்.

 

கடவுளுக்குக் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, அவரை வணங்கி ஆறுகால பூஜையும் செய்யவேண்டும். நாம் நமக்கு ஒரு வீடு கட்டிய பின்பு எப்படி கிரகப் பிரவேசம் செய்கிறோமோ அப்படி கோவிலுக்கு கும்பாபிஷேகம் என்பது முக்கியமானது. கும்பாபிஷேகம் முடிந்த பின்பு ஆன்மீகப் புராணச் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், இறைவன் மீதானதை குறைந்தபட்சம் 48 நாட்களாவது நடத்தவேண்டும்.

 

மந்திரங்களால் சக்தியூட்டப்பட்ட கும்பங்களிலுள்ள நீரைக் கோவில் உச்சியிலுள்ள கலசங்களுக்கு அபிஷேகம் செய்து, ஆராதனை செய்யவேண்டும். கும்பாபிஷேகம் பலவகைப்படும். புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்துக்குச் செய்யப்படும் கும்பாபிஷேகம் "ஆவர்த்தம்' என்றழைக்கப்படும். வெகுநாட்களாகப் பூஜையின்றி கேட்பாரற்றுக்கிடந்த கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்வது "அனவர்த்தம்' என்றழைக்கப்படும். ஒரு முக்கியமான இடம் மட்டும் புனரமைப்பு செய்வது "புனராவர்த்தம்' என்பதாகும். ஆலயத்தில் தகாத செயல் நடந்துவிட்டால் புனரமைப்பு செய்யும் கும்பாபிஷேகம் "அந்தரிதம்' எனப்படும்.

 

"கும்பம்' என்பது உடலாகும். கும்பத்தின் மீது சுற்றப்பட்ட நூல் நாடி நரம்புகளாகும். உள்ளே ஊற்றப்படும் நீர் ரத்தத்தையும், அதனுள் போடப்படும் தங்கம் ஜீவனையும், மேல் வைக்கப்படும் தேங்காய் தலையையும், உள்ளே போடப்படும் தானியம் ஆசனத்தையும் குறிக்கும். இதில் செய்யப்படும் விக்ரகப் பூஜையானது அனுக்ஞை, சங்கல்பம், பாத்திர பூஜை, கணபதி பூஜை, பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்கு ரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம் என்று பலவகை உள்ளன.

 

அதேபோல யாகசாலையிலுள்ள குண்டங்கள் ஏககுண்டம், பஞ்சாக்னி குண்டம், நவாக்னி குண்டம், உத்தமபக்ஷம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த குண்டங்கள் தெய்வங்களைப் பொருத்து மாறுபடும். மேற்சொன்ன ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தை வைத்தே செய்யப்படுகின்றன. "பூர்ணாஹுதி' என்பது யாகத்தைப் பூர்த்தி செய்வதாகும். கும்பாபிஷேகம் முடிந்தபின்பு மூல விக்ரகங்களுக்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜை, நிவேதனம், கற்பூர தீப ஆரத்தி செய்து, 48 நாட்கள் விசேஷ அபிஷேகம் செய்து மூலவரை முழுசக்தி பெறச் செய்ய வேண்டும்.

 

கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்பவர்கள், ஹோம மந்திரங்களைக் காதால் கேட்பவர்கள், தெய்வத்தையும், ஆலயத்தையும், கும்பாபிஷேகத்தையும் பார்ப்பவர்கள் என பலதரப்பட்டவர்களும் நீண்ட ஆயுள், கல்வி, உடல் ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, நிறைந்த செல்வம் அனைத்தையும் அடைவார்கள். கும்பாபிஷேகத்திற்கு நன்கொடையாக பொருள் கொடுத்தால் புண்ணியம் சேரும். இதனால் நமக்கு நல்ல பதவி கிடைக்கும். இது மறுமைக்கு நாம் சேர்த்து வைக்கும் அருள் சேமிப்பாகும்.

 

கும்பாபிஷேகத்தின் கடைசியில் வைதீகர்கள் ஆசிர்வாதம் என்ற மந்திரத்தை ஓதுவார்கள். அப்போது பக்தர்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மந்திரம் முடிந்ததும் "ததாஸ்து' என்று வைதீகர்கள் சொல்வார்கள். "ததாஸ்து' என்றால் "அப்படியே ஆகட்டும்' என்பது பொருள் இதைச் சொல்லும் போது நாம் ஏதாவது தவறானவற்றைப் பேசினாலோ, நினைத்தாலோ அது அப்படியே ஆகி விடும். மேலுள்ள "அஸ்து' தேவதைகள் நமக்கு அருள் பாலிப்பதால், நாம் நல்லது சொன்னால் நல்லது நடக்கும். எனவே நல்லதே நினைத்து நன்மை பெறவேண்டும்.

 

கும்பாபிஷேகத்தன்று நாம் அந்த ஆலயத்திலிருந்து தரிசித்தால் முப்பத்து முக்கோடி தேவர்களும், மாமுனிவர்களும், ரிஷிகளும் நம்மை ஆசிர்வதிப்பார்கள். இந்த ஆசிர்வாதத்தால் நாம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழலாம். நாடும் நலம்பெறும்.

 


 

Next Story

மங்கலம் பொழியும் மகா சிவராத்திரி; விரதமும் பலனும்!

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

Auspicious Maha Shivratri; Fasting and benefits!

 

மனித மனம் மண், பொன், பெண் ஆகிய மூவாசைகளையும் சுற்றியே அலைபாய்கிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூன்று ஆசைகளே விளங்குகின்றன. ஒவ்வொருவரின் மனமும் செல்வத்தில் அந்தஸ்தில் புகழில் மற்றவர்களைக் காட்டிலும் தான் சிறந்து விளங்க வேண்டுமென்று போராடுகிறது. பிறக்கும் போதே ஒருவர் செல்வச் செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதற்கும் ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதற்கும் அவரவரின் ஊழ்வினையே காரணம். முன் ஜென்ம ஊழ்வினையை அறுக்க ஒவ்வொருவரும் பல வழிகளையும் தேடி அலைகிறார்கள்.

 

ஊழ்வினையிலிருந்து மீண்டு இறைவனை அடைய நம் முன்னோர்கள் பல்வேறு வழிகளை போதித்துள்ளார்கள். உலகிலுள்ள மதங்களில் எந்தவித கட்டுப்பாடுமில்லாமல் எந்தவகையில் பூஜித்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்னும் நம்பிக்கையுள்ள ஒரே மதம் இந்து மதம். கர்மவினையைத் தீர்த்து பிறவா நிலையடைய இந்து மதத்தில் நான்குவித உபாயங்கள் கூறப்பட்டுள்ளன.

 

நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன் கோவில்களுக்கு சென்று இறைவனை துதித்துப் பாடுவது; மலர்மாலை தொடுப்பது; சந்தனம் அரைத்துக் கொடுப்பது போன்ற இறைப்பணிக்கு உதவுதல். திருக்கோவிலில் மெழுகிடுதல்; தூய்மை செய்வது போன்ற உழவாரப்பணிகள் செய்து வணங்குதல் யாவும் சரியான வழியாகும்.

 

ஒருவர் தன் வாழ்நாளில் மிகுதியான சிரமத்தை அனுபவிப்பதற்கு ஜாதகத்திலுள்ள தோஷங்களே காரணம். அத்தகைய தோஷங்களை அழிக்கும் வல்லமை பெற்றவர் சிவபெருமான். தன்னை வணங்குபவர்களின் மனதிலிருக்கும் கெட்ட எண்ணக்கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கெட்ட கர்மவினைக் கழிவுகளை அழிப்பவர். அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் நிலவும் நோய்கள், மனக்கவலைகள், வறுமைநிலை போன்றவற்றை அறவே அழிப்பவர்.

 

ஒருவர் தனது மூன்று பிறவிகளில் செய்த பாவங்களையும் அழிப்பவர் சிவபெருமான். சிவன் என்ற சொல்லுக்கு மங்களம், இன்பம் என்று பொருள். ஒருவர் தன் வாழ்வில் வினைப்பயனை அழிக்க எட்டுவிதமான சிவ வழிபாட்டு முறைகளைக் கடைபிடிக்கலாம் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் மிகச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி திதியன்று வரும் மகா சிவராத்திரி விரதமாகும். சிவராத்திரி என்றால் ஒளிமயமான இரவு; இன்பம் தருகின்ற இரவு என்று பொருள்.

 

குளிர்ந்த நீரில் குளித்து, நெற்றியில் திருநீறு பூசி, கடவுள் படம் முன் விளக்கேற்றி, சிவராத்திரி விரதத்தைத் தொடங்க வேண்டும். சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் ஒருவேளை மட்டுமே உணவுண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் சமைத்த உணவை உண்ணாமல், சிவ சிந்தைனையுடன் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தலாம். பகல் மற்றும் இரவு முழுவதும் எதுவும் சாப்பிடக் கூடாது. வயதானவர்கள், நோயாளிகள் சமைக்காத உணவுகளான பழங்கள், அவல் சாப்பிடலாம்.

 

மகா சிவராத்திரியன்று முழுவதும் மௌன விரதமிருந்து, மனதுக்குள் பஞ்சாட்சரமாகிய ‘ஓம் நமசிவாய’ மந்திரம் சொல்வதால் புண்ணியப்பலன் மிகுதியாகும். கோவில்களில் நடைபெறும் நான்கு கால அபிஷேக பூஜைகளில் கலந்துகொண்டு சிவனை வழிபட வேண்டும். மறுநாள் காலையில் நீராடி, பகல் முழுவதும் உறங்காமலிருந்து விரதத்தை முடித்தால், சகல வினைகளும் நெருப்பில் விழுந்த தூசிபோல் உடனே சாம்பலாகும்.

 

வயதானவர்கள், குழந்தைகள், கோவிலுக்குச் செல்ல முடியாமல் உடல்நலக் குறைவோடு இருப்பவர்கள் சிவபுராணம், வில்வாஷ்டகம் படித்து, வில்வத்தால் சிவபூஜை செய்தால் அந்த நிமிடமே அவர்களுடைய அனைத்துப் பாவங்களும் நீங்கும். அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். பஞ்சமகா பாதகங்கள் அகலும்.

 

மகா சிவராத்திரியன்று விரதமிருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து வந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதியடைந்து முக்தியடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.

 

உணவுண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், குரோதம், கோபம், பேராசை, பொறாமை ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். எல்லாருக்கும் இந்த மகா சிவராத்திரி விரதமிருக்கும் பாக்கியம் கிட்டாது. அவனருளாலே "அவன் தாள் வணங்கி' என்றபடி, அவன் (சிவன்) அருள் இருந்தால் மட்டுமே இந்த மகா சிவராத்திரி விரத வாய்ப்பு கிட்டும். வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றைப் பெற விரும்புவோர் அவசியம் மகா சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

 

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி