Skip to main content

அக்னி நட்சத்திரப் பரிகாரங்கள்!

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

சித்திரை மாதம் இருபத்தொன்றாம் தேதிமுதல் வைகாசி மாதம் பதினான்காம் தேதிவரை வெய்யிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும். இதனை கத்திரி வெய்யில், அக்னி நட்சத்திரம் என்று சொல்வர்.

"கத்திரி' என்பது தமிழ் மாதத்தேதி தொடர்பாக அமையும் காலப்பகுதி.

இந்த வெய்யிலின் கொடுமை சித்திரை மாத இறுதி பதினோரு நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் பத்து நாட்களும் கொண்டது.

இந்தக் காலகட்டத்தில் சூரியனை நோக்கி சந்திரன் மட்டுமல்ல; பூமி கூட சற்று அருகில் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது. அப்போது 110 டிகிரி வரைகூட அனல் வீசும்.

அக்னி நட்சத்திரத்தின் சக்தி கொண்டது கார்த்திகை நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் தேவதை அக்னி தேவன். இந்த நிலையில் வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும். மழை பெய்யும் வாய்ப்பும் உண்டு. அப்படி மழை பெய்தால் வெய்யிலின் தாக்கம் குறையும். இந்த மழை நல்ல விளைச்சலுக்கு உறுதுணையாக இருக்கும். அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வயல்வெளியில் வெடிப்பு ஏற்படும்.

sungod



அப்போது பூமிக்குள்ளிருக்கும் உஷ்ணம் வெளியேறும். அத்துடன் லேசாக காற்று வீசும் நிலை ஏற்பட்டால், வயலைச் சுற்றியுள்ள மக்கிய இலை, தழை மற்றும் குப்பைக் கூளங்கள் அந்த வெடிப்புகளுக்குள் சென்றுவிடும். அந்த நிலையில் கோடைமழை சிறிதளவு பெய்தாலும் குப்பைக் கூளங்கள் நல்ல உரமாகிவிடும். இதை "இயற்கை தந்த கொடை' என்று விவசாயப் பெருங்குடி மக்கள் கூறுவர்.

இந்த அக்னி நட்சத்திர நாட்கள் குறித்து புராணங்களில் தகவல்கள் உண்டு.

யமுனை நதிக்கரைக்கு அருகில் காண்டவ வனம் என்ற பெரிய வனம் இருந்தது. அது இந்திரனால் காக்கப்பட்டது. அந்த வனத்தில் உயிர்காக்கும் அரிய முலிகைகளை செழித்து வளரச் செய்தான். மழையின் அதிபதியான இந்திரன். (இந்திரனுக்கு காண்டவ வனன்' என்ற பெயரும் உண்டு.)

ஒருசமயம் வனத்தின் அருகே ஓடும் யமுனையில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தார்கள். அவர்கள் கரையேறும் போது அந்தணர் ஒருவர் அங்கே வந்தார். அவர் கண்ணனிடம், ""எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. அதற்கு நீங்கள்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணி தீர்க்கும் மருந்துள்ளது. நான் இந்த வனத்தில் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்'' என்று வேண்டினார். அவரது வேண்டுதல் வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அவரை உற்றுப்பார்த்தார்.

""அக்னிதேவனே, ஏன் இந்த வேடம்?'' என்று கண்ணன் கேட்க, தன் வேடத்தைக் கலைத்த அக்னிதேவன், ""பரமாத்மாவே, தங்களுக்குத் தெரியாததல்ல. துர்வாச முனிவர், சுவேதசி என்னும் மன்னனுக்காக நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் நடத்தினார். அந்த யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட அதிகப்படியான நெய்யை நான் உண்ணும்படி நேர்ந்ததால் மந்தநோய் என்னைத் தாக்கிவிட்டது. அதிலிருந்து நான் குணமடைய தகுந்த மூலிகைகள் இந்த வனத்தில் உள்ளன. இதற்குள் நான் பிரவேசிக்கும் பொழுதெல்லாம், இந்திரன் மழைபொழிய மேகங்களுக்கு உத்தரவிட்டு என் தீ நாக்குகளை அணைத்துவிடுகிறான்.

அதனால் என் நோய் தீர மூலிகைகள் கிடைக்காமல் மிகவும் துன்பப்படுகிறேன். எனக்கு உதவுங்கள்'' என்றான்.

""உனக்கு இதனைச் செய்வதால் எங்களுக்கு என்ன பயன்?'' என்று அர்ச்சுனன் கேட்டான்.

""நீங்கள் கேட்டதைத் தருகிறேன்'' என்று அக்னிதேவன் வாக்கு கொடுத்தான்.

உடனே கண்ணன், ""நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. தற்பொழுது காண்டீபம், அம்பறாத்தூணி, அம்புகள், தேர் ஆகியவை வேண்டும்'' என்றார்.

உடனே அக்னிதேவன் அவற்றை ஒரே நொடியில் வரவழைத்துக் கொடுத்தான். கண்ணன், அர்ச்சுனனைப் பார்க்க, அவற்றைப் பெற்றுக்கொண்டான் அர்ச்சுனன்.

அப்பொழுது கண்ணன், ""அக்னி தேவனே, ஒரு நிபந்தனை. உன் பிணியைத் தீர்த்துக்கொள்ள 21 நாட்கள் மட்டும் இந்த வனத்திற்குள் பிரவேசிக்கலாம். அதிகமாக அரிய மூலிகைகளை நீ உண்டால் அதுவே உனக்கு நஞ்சாக மாறிவிடும். நீ காட்டிற்குள் நுழையும் சமயத்தில் இந்திரன் மழை பொழிவிக்காமல் பார்த்துக்கொள்கிறோம்'' என்றார்.

அக்னியும் அதற்கு உடன்பட்டு காண்டவ வனத்திற்குள் பிரவேசித்தான். இதனையறிந்த இந்திரன், காளமேகத்தை அழைத்து காண்டவ வனப்பகுதியில் மழைபொழிய உத்தரவிட்டான். காளமேகம், தன் நண்பர்கள் கூட்டத்துடன் காண்டவ வனத்தை நோக்கி வருவதைப் பார்த்த கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அதன் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், தன் அம்புகளால் சரக்கூடு கட்டி மழை பொழிவதைத் தடுத்தான்.



அக்னியும் ஏழு நாட்கள் வேகமாக வனத்திலுள்ள மூலிகைகள் பகுதிக்குச் சென்று கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருந்த மருத்துவ சக்திமிக்க மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் பகவானிடமும் அர்ச்சுனனிடமும் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.

அறிவியல் ரீதியாக நாம் வாழும் பூமி 235 பாகை சாய்வான நிலையில், சீரான அச்சில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது. அப்படி சுற்றும்பொழுது பூமியின் வடபுலத்தில் ஆறு மாதங்களும், தென்புலத்தில் ஆறு மாதங்களும் சூரியனின் ஒளி விழும். சூரிய ஒளி நேராக விழும் காலம் கோடை. சாய்வாக விழும் காலம் குளிர்காலம்.

கோடை காலத்தில் சில நாட்கள் மட்டும் சூரியனின் கதிர்கள் நேர்கோணத்தில் பூமிமீது விழும். அப்போது சூரியனின் அதிகபட்ச வெப்பம் பூமிமீது விழும். இதைத்தான் கத்திரி வெயில், அக்னி நட்சத்திரம் என்கிறோம்.

சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் நுழையும் காலம், பெரும்பாலும் சித்திரை 20-ஆம் தேதி முதல் வைகாசி 14-ஆம் தேதிவரை என்று அகராதி கூறுகிறது.

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் சித்திரை 21-ஆம் தேதி (4-5-2019) அன்று தொடங்கி வைகாசி 15-ஆம் தேதி (29-5-2019) பௌர்ணமியுடன் முடிவு பெறுகிறது. இந்த நாட்களில் வெப்பம் கடுமையாக இருக்கும். மழை பெய்தால் அக்னி நட்சத்திரம் சாந்தமடையும். இருந்தாலும் பூமியில் வாழும் மானிடர்களுக்கு உடல் எரிச்சல், வயிற்றுப்போக்கு, கண் நோய் போன்றவை வரக்கூடும். அதற்கேற்ப குளிர்ச்சியான ஆகரங்கள் உண்பது நலம் தரும். இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவை நற்பலன் தரும். நீர் மோரும் உடலுக்கு ஏற்றது. பழைய சோறும் உண்ணலாம். இந்தக் காலகட்டத்தில் மனிதர்கள் மட்டுமல்ல; தெய்வங்களைக் குளிர்விக்கும் முறையும் நடைமுறையில் உள்ளது.

தெய்வத் திருமேனிக்குமேலே, சிறுசிறு துளைகளிட்ட ஒரு செப்புப் பாத்திரத்தைத் தொங்கச் செய்து, அதன்மூலம் சொட்டுசொட்டாக நீர் விழும்படி செய்வார்கள். பெரும்பாலும் இது சிவலிங்கத் திருமேனிக்குச் செய்யப்படுகிறது. அதனை "ஜலதாரை' என்று குறிப்பிடுவர். சில சிவாலயங்களில் எப்பொழுதும் ஜலதாரையை பக்தர்கள் காணலாம். இதன் காரணமாக கருவறையில் குளிர்ச்சியான காற்றலை பரவி, பக்தர்களையும் குளிர்விப்பதாக அமைந்துள்ளது. சில சிவாலயங்களில் 365 நாட்களும் ஜலதாரை உண்டு. இவ்வாறு சிவபெருமானைக் குளிர்விப்பதுபோல், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் மூலவர் பள்ளிகொண்டிருக்கும் கருவறை விமானத்தின் பின்புறத்தில் (கருவறைக்கு வெளிப்புறம்) சிறிய வாய்க்கால்போல் நீர் நிரப்புவதற்கு வசதியுண்டு. அருகிலுள்ள தீர்த்தக்கிணற்றிலிருந்து நீரெடுத்து கருவறையைச் சுற்றியுள்ள வெளிப்புற வாய்க்காலில் நிரப்புவார்கள். இதனால் கருவறையின் உட்புறத்தில் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும். நீரினை தினமும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். உள்ளூர் பக்தர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்து, அந்த நீரினை வெளியேற்றும்போது குடங்களில் நிரப்பி தாங்கள் நீராடுவதற்காக எடுத்துச்செல்வார்கள். அந்த நீர் இருந்த இடத்தைத் தூய்மை செய்து, மீண்டும் புதிதாக நீர் நிரப்புவது வழக்கம். இந்த நிகழ்வு கோடைக்காலம் முழுவதும் நடைபெறும்.




இதேபோல், திருச்சிக்கு அருகிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் கருவறையின் பின்புறமும் நீர் நிரப்ப வசதியாக வாய்க்கால்போல் அமைந்துள்ளது. அதில் தினமும் நீர் நிரப்புவார்கள். கோடைக்காலத்தில் மட்டுமல்ல; எல்லா மாதங்களிலும் நீர் நிரப்பு வைபவம் நடைபெறும். இதனால், கருவறை இயற்கையிலேயே குளிர்ச்சியாகத் திகழும்.

அக்னி நட்சத்திர தோஷ நாட்களில் நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நீர் மோர், பானகம் வழங்குதல், ஏழை எளியவர்களுக்கு குடை, விசிறி அளித்தல், உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணிகள் அளித்தல் போன்றவை புண்ணியம் தரும். அன்னதானம் செய்ய விரும்புகிறவர்கள் தயிரன்னம் அளிக்கலாம். கிராமங்களில் வசிப்பவர்கள் அக்னி நட்சத்திர தோஷக்காலத்தில் மொட்டையடித்தல், நிலம் தோண்டுதல், வீடு கட்டுதல், மரங்கள், செடிகள் வெட்டுவது, தோட்டம் அமைப்பது, விதை விதைப்பது, புதிய குடியிருப்புப் பகுதி அமைப்பது போன்றவற்றைச் செய்வதில்லை. இது சாஸ்திரப்படி தவிர்க்க வேண்டியவை ஆகும். இதில் அறிவியல் கலந்திருப்பதையும் அறியலாம்.

அக்னி நட்சத்திர நாட்களில் பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மதேவனையும், கிருத்திகைக்குரிய அக்னி மற்றும் முருகப்பெருமானையும் வழிபட, நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
 

Next Story

இன்றுடன் விடைபெறுகிறது அக்னி நட்சத்திரம்! 

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

Agni natchathiram bids farewell to today!

 

தமிழ்நாட்டில் 25 நாட்களாக நீடித்த அக்னி நட்சத்திரம், இன்றுடன் (28/05/2022) விடை பெறுகிறது. 

 

கத்திரி வெயில் என்றழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே 4- ஆம் தேதி தொடங்கி மே 28- ஆம் தேதி நிறைவுபெறும். அந்த வகையில், 25 நாட்கள் நீடித்த கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த 25 நாட்களில் கடந்த மே 6- ஆம் தேதி அன்று வேலூரில் 105.98 டிகிரி வெயில் பதிவானது தான் அதிகபட்ச வெப்பமாகும். 

 

இந்தாண்டு பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்ததால், வெப்பத்தின் தாக்கம் சற்றுக் குறைவாகவே இருந்தது. 

 

Next Story

தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடக்கம் 

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

Kathiri Veil in Tamil Nadu starts tomorrow

 

தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.

 

அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் நாளை தொடங்குகிறது. நாளை முதல் அடுத்த 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. நேற்றைய தினமே தமிழகத்தில் தினசரி வெயிலின் தாக்கம் 14 இடங்களில் 100 டிகிரியை தாண்டியிருந்த நிலையில், நாளை தொடங்கும் அக்னி நட்சத்திரத்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.