Skip to main content

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் நடிகர் சரத்குமார் தரிசனம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Actor Sarathkumar Darshan at Vallakottai Murugan Temple

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  உள்ளது. இங்கு தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்தின் மலர்களைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால நூல்கள் சிறப்பாக தெரிவிக்கின்றன. இது சித்திரை மாதம் மட்டுமே மலரும் தன்மையுடையது. இந்த மரத்தின் அருகில் புராண காலத்தில் முருகப்பெருமான் பகீரத மன்னனுக்கு காட்சியருளி அவனுக்கு மீண்டும் அரசாட்சியை வழங்கியதாக இத்திருக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது. அதனால் இங்கு வந்து வணங்குவோருக்கு உயர்ந்த பதவிகள், வளமான செல்வங்கள், சொந்த வீடு ஆகியன கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த திருக்கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் சினிமா நடிகர்கள் உள்ளிட்ட கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் வந்து வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டு புகழடைகின்றனர். அந்த வகையில், நேற்று (28-04-24) ஞாயிறு விடுமுறை நாளையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதற்கொண்டே திருக்கோயிலுக்கு வந்து வரிசையில் நின்றனர். காலை 6 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் உற்சவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு பலவித மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

உற்சவர் முருகப்பெருமானும் சிறப்பு அலங்காரத்தில் சஷ்டி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார். இதனிடையே, காலையில் நடிகர் சரத்குமார் வருகைதந்து முருகப்பெருமானை பக்தியுடன் வணங்கினார். முருகப்பெருமானுக்கு நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்துகொண்டு தரிசித்தார். பின்னர், ஒவ்வொரு சந்நிதியாக சென்று வணங்கினார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், வஸ்திரம், மாலைகள், முருகன் படம் ஆகியன வழங்கப்பட்டன.

Actor Sarathkumar Darshan at Vallakottai Murugan Temple

விடுமுறை நாளையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டனர். திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், மோர், குடிநீர் ஆகியவற்றை இணை ஆணையர இரா.வான்மதி, உதவி ஆணையர் பொ.லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர் அறிவுரையின் பேரில் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் வழங்கினார்.

 

Next Story

பழனி கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டம்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
struggle against the management of Pazhani temple by closing all shops

பழனி மலை அடிவாரத்தில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வணிக கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகம் பழனி நகரில் வசிக்கும் மக்களுக்கும் வணிகர்களுக்கும் இடையூறு செய்வதை கண்டித்து பழனி நகர் மன்றம் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

அதை தொடர்ந்து நகர் மன்ற உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று வணிகர் சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கடைகளை அடைத்துள்ளனர். பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், ரயில்வே சாலை , சன்னதி வீதி உள்ளிட்ட நகரில் அனைத்து இடங்களில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் உணவுகள், தங்கும் விடுதிகள்,  இயங்காததால் வெளியூரிலிருந்து பழனி முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் சிரமம் அடைந்துள்ளனர். காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான நிர்வாகம் பழனி நகர மக்கள் மற்றும் வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்ற வருகிறது. 

இந்த நிலையில் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மலையடி வாரத்தில் பிரட், பிஸ்கட், பழங்கள், குழந்தைகளுக்கு தேவையான பால் ஆகியவற்றை விலை இல்லாமல் வழங்கவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பழனி கோயில் தேவஸ்தான நிர்வாகத்தை எதிர்த்து நகர மன்றம் சார்பில் நடத்தப்படும் கடையடைப்பு போராட்டத்தால் பழனியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு பழனி முருகனை தரிசிக்க வரும் பக்தர்களும் பாதிப்படைந்து வருகிறார்கள்.

Next Story

காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Resolution of no confidence in Kanchipuram Mayor

கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை கடந்த 3 ஆம் தேதி (03.07.2024) ராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கினார். மேயர் பதவியில் இருந்து கல்பனா ராஜினாமா செய்தது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவிக்கையில், “உடல் நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே (ஜூலை 3) நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன், தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. கோவை, நெல்லை என அடுத்தடுத்து ஒரே நாளில் இரு மேயர்கள் ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது வரும் 29 ஆம் தேதி (29.07.2024) காலை 10 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற சிறப்பை பெற்றவர் மகாலட்சுமி ஆவார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 கவுன்சிலர்கள் மொத்தம் உள்ளனர். இவர்களில் மேயருக்கு எதிராக 33 திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் ஆணையர் கண்ணன் உள்ளிட்டோரிடம் மனு அளித்திருந்தனர். இந்த மனுவின் அடிப்படையில் மேயர் மகாலட்சுமி மீது 29 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.