/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Guru_0.jpg)
பெரும்பாலோர் குருப்பெயர்ச்சியன்று சிவாலயங்களில் தெற்கு நோக்கியருளும் தட்சிணாமூர்த்திக்கு ஆராதனை செய்வார்கள். ஆனால், விவரம் தெரிந்தவர்கள் நவகிரகத் தொகுப்பில் வடதிசை நோக்கி எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற மலர் மாலை சாற்றி, கொண்டைக்கடலை மாலையும் அணிவித்து அர்ச்சித்து வழிபடுவார்கள். பொதுவாக, நவகிரகங்களில் ஒன்றான தேவ குருவான வியாழனுக்கும், லோக குருவான தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் உண்டு. நவகிரக குரு, பிரம்மபுத்திரராகிய ஆங்கீரச மகரிஷியின் மைந்தனாவார்.
இவரை வாசஸ்பதி, பிரகஸ்பதி, தேவகுரு என்றழைப்பர். இவர் பொன்னாபரணங்கள் அணிந்தவர். யானை வாகனம் கொண்டவர். திருமணங்களைக் கூட்டி வைப்பவர். உயிர்களுக்கு யோகங்களையும் போகங்களையும் அளிக்கும் சக்தி கொண்டவர் என்கின்றன வேதநூல்கள். உலகம் தோன்றி நிலைப்பெற்று, அந்த உலகை மீண்டும் ஒடுங்கச் செய்யும் பேராற்றல் மிக்க சிவபெருமானின் வடிவமே தட்சிணாமூர்த்தி. இவர் காமனை வென்றவர். மகா யோகி. ஞானத்தை அருள்பவர். கல்லாடை புனைந்தவர். மௌனமாக இருந்தே உபதேசம் செய்பவர். எனவே, நவகிரக குருப்பெயர்ச்சிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் சம்பந்தமில்லையென்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. எனினும் குருப்பெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் எந்தத் தவறுமில்லை என்பர்.
ஆங்கீரச முனிவரின் மகனான பிரகஸ்பதி தன் தந்தையிடம் கல்வி கற்றாலும், மேன் மேலும் சிறந்து விளங்க அடர்ந்த வனப் பகுதிக்கு வந்து, அங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவனை வழிபட்டு, கடுந்தவத்தில் ஆழ்ந்தார். அவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குக் காட்சி தந்து நவகிரகப் பதவியை வழங்கி ஆசிர்வதித்தார். நவகிரகங்களில் ஒருவராகப் பதவி உயர்வு பெற்ற திருத்தலம் திட்டை. இத்தலம் தஞ்சாவூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன்: வசிஷ்டேஸ்வரர்; அம்பாள்: சுகந்த குந்தளாம்பிகை. இத்திருக்கோவிலில் இறைவனுக்கும் அம்பாள் சந்நிதிக்கும் நடுவே ராஜகுருவாக தனிச்சந்நிதி கொண்டிருக்கிறார் குரு பகவான்.
குருவான பிரகஸ்பதிக்கும் தோஷம் ஏற்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த நிலையில் அவற்றைப் போக்கிக்கொள்ள சில திருத்தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு பேறுபெற்றார் என்கின்றன புராணங்கள். ஆனால் தட்சிணாமூர்த்திக்கு எந்த தோஷமும் இல்லை. பிரகஸ்பதியின் தோஷங்கள் நீங்கிய தலங்கள் தென்குடித் திட்டை, ஆலங்குடி, திருச்செந்தூர், திருவதாயம் போன்றவையாகும்.
மேற்கண்ட தலங்களில் தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட புண்ணிய தலங்களில் ஒன்று திருவலிதாயம் எனப்படும் பாடி. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு திருவலிதாய சுவாமி சமேத ஜகதாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இங்கு அருள் புரியும் குரு பகவானுக்கு மஞ்சளாடை சாற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கி சந்தோஷம் ஆட்கொள்ளும் என்று தலபுராணம் கூறுகிறது.
குருவின் திருவருளைப்பெற மேலும் பல திருத்தலங்கள் உள்ளன. அவற்றுள் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்திலுள்ள ஆலங்குடி திருத்தலமும் ஒன்று. இங்கு ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அம்பாள்: மட்டுவார் குழலியம்மை. இங்கு குருதட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். கும்பகோணத்திலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது இவ்வாலயம். ஒரே கோவிலில் ஏழு குருக்கள் எழுந்தருளியுள்ள திருத்தலம் திருச்சியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள உத்தமர் கோவில் ஆகும். இது ‘சப்தகுருத்தலம்' என்று போற்றப்படுகிறது. தேவகுருவான பிரகஸ்பதி, அசுர குருவான சுக்கிராச்சாரியார், தந்தைக்கு உபதேசித்த ஞானகுரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மதேவன், விஷ்ணு குரு வரதராஜப் பெருமாள், சக்திகுரு சௌந்தர்ய நாயகி, சிவகுரு தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஒருங்கே அருள்பாலிக்கும் உத்தமர் கோவிலில் எழுந்தருளியுள்ள தெய்வங்களை ஒருமுறை தரிசித்தாலே கோடி புண்ணியம் கிட்டும். குருப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல பலன்கள் கிட்டுமென்று ஞானநூல்கள் கூறுகின்றன.
குருபலன் வேண்டும் என்பவர்கள்:மேஷ ராசிக்காரர்கள் ஆலங்குடி திருத்தலத்திற்குச் சென்று குரு பகவானை தரிசிக்கலாம்.
ரிஷப ராசியினர் தென் குடித் திட்டைக்கும்;
மிதுன ராசியினர் அரக்கோணம் அருகே தக்கோலம் தலத்திற்கும்;
கடக ராசியினர் இலம்பயங்கோட்டூர் தலத்திற்கும்;
சிம்ம ராசியினர் திருப்புலிவனத்துக்கும்;
கன்னி ராசியினர் பாடி (சென்னை) தலத்திற்கும்;
துலாம் ராசியினர் பெரிய பாளையம் அருகே சுருட்டப்பள்ளிக்கும்;
விருச்சிக ராசியினர் புளியரை (தென்காசி செங்கோட்டை அருகில்) தலத்துக்கும்;
தனுசு ராசியினர் உத்தமர்கோவிலுக்கும்;
மகர ராசியினர் கோவிந்தவாடி (அகரம்) தலத்துக்கும்;
கும்ப ராசியினர் திருவொற்றியூருக்கும்;
மீன ராசியினர் மயிலை தட்சிணாமூர்த்தி (கபாலீஸ்வரர் கோவில்) திருக்கோவிலுக்கும் சென்று வழிபட சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.
வாய்ப்பில்லாதவர்கள் தாங்கள் வசிக்கும் ஊரிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று நவகிரகத் தொகுப்பில் வடக்கு திசை நோக்கியிருக்கும் குரு பகவானையும், தென்திசையில் தனிச் சந்நிதியில் அருளும் ஆதிகுருவான தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டாலும் பேறுகள் பல பெற்று சுகமுடன் வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
ஸ்ரீ குரு காயத்ரி
‘ரிஷபத் வஜாய வித்மஹே
க்ருணிஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.'
குரு காயத்ரி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)