குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை நியமிப்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், இந்தியா கூட்டணியும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தன.

Advertisment

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். நாடாளுமன்ற இரு அவையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 426 எம்.பிக்கள் உள்ளதால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் அவருக்கு தற்போதில் இருந்தே வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது.

Advertisment

அதேசமயம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்காக ஆலோசனை இன்று (19-08-25) நடத்தப்பட்டது. அதன்படி இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருபக்கம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மறுபுறம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தர வேண்டும் என இந்தியா கூட்டணியும் மற்ற கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது.

இந்த நிலையில், நீதிபதி சுதர்சன் ரெட்டியை ஆதரிக்குமாறு இந்தியா கூட்டணி விடுத்த கோரிக்கையை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரவுள்ளதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறுகையில், “மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க எங்களை அணுகி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் எனக் கோரினார். அதனால் அவர்களுக்கு எங்கள் வாக்குறுதியை அளித்துவிட்டோம்” என்று கூறினார். 

Advertisment