96 படம் மூலம் பிரபலமான நடிகையான கௌரி கிஷன், புதிதாக அதர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அரங்கேறிய ஒரு சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கூட்டத்தில் இருந்த யூடியூபர் ஒருவர், "படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே? நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் சர்ச்சையாக கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்வியால் கோபமடைந்த கௌரி கிஷன், “நீங்க அன்னைக்கு கேட்டது ரொம்ப அவமரியாதையான கேள்வி, அது ஜர்னலிசமே கிடையாது, நீங்க கேட்டது உருவக்கேலி செய்யறது போல இருக்கு" என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு அந்த யூடியூபரும் வாக்குவாதம் செய்ததால் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் காட்டுத்தீ போல் பரவியது. அதே நேரம், கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித், நடிகை குஷ்பூ, பாடகி சின்மயி உள்ளிட்டோர் கௌரி கிஷனுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து அநாகரிக கேள்வி எழுப்பியது தொடர்பாக.. சம்மந்தப்பட்ட யூடியூபர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக யூடியூபர் R.S.கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
Follow Us