மாதா கோவில் கெபி உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிவிட்டு, அங்கிருந்த சிசிடிவி கேமரா முன்பு நடனமாடிய இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வி.வி. பொறியியல் கல்லூரி பகுதியில் மாதா கோவில் கெபி ஒன்று அமைந்துள்ளது. இந்த கெபியில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வழிபட்டுச் செல்வது வழக்கம். இங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து, உண்டியலை கெபியின் இரும்பு கதவுக்கு உட்புறமாக தேவாலய நிர்வாகத்தினர் வைத்தனர். மேலும், திருட்டைத் தடுக்கும் பொருட்டு, அண்மையில் புதிதாக சிசிடிவி கேமராக்களை அமைத்து, 24 மணிநேரமும் கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், 20 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மூன்று பேர் கொண்ட திருட்டுக் கும்பல் ஒன்று அந்த கெபிக்கு வந்துள்ளது. பின்னர் அவர்கள், நீளமான குச்சியில் பபுள் கம் ஒட்டி, அதன் மூலம் இரும்பு கதவுக்கு உட்புறமாக இருந்த உண்டியலில் இருந்த பணத்தை லாவகமாகத் திருடினர். அப்போது, அங்கு புதிதாகப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவைப் பார்த்த திருட்டுக் கும்பல், கேமராவை நோக்கி அசால்ட்டாகச் சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும், உற்சாக நடனமாடி, தில்லாகத் திருட்டை அரங்கேற்றி சென்றுள்ளது.
காலையில் வழிபாடு செய்ய வந்த இறை பக்தர்கள், உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாக மாதா கோவில் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். மாதா கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அந்தத் திருட்டுக் கும்பல் கேமராவைப் பார்த்து நடனமாடிய வீடியோ காட்சிகளும், கெபி உண்டியலில் இருந்து பணத்தை திருடிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி