நெல்லை மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் பாலமுருகன். இவரது தந்தை மலுமிச்சம்பட்டி அருகே குதிரைப் பண்ணையில் பணிபுரிவதால், குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். பாலமுருகன், கொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதாகி, நெல்லை மத்திய சிறையில் இருந்து வந்தார். அங்கு அவருக்கு முருகப்பெருமாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, முருகப்பெருமாள், பாலமுருகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது நண்பர் ஜெயராமனுக்கு கோவையில் வேலை வாங்கித் தருமாறு கேட்டுக்கொண்டார். இதற்காக பாலமுருகன், முருகப்பெருமாளையும் ஜெயராமனையும் மலுமிச்சம்பட்டிக்கு வரவழைத்தார்.
நெல்லையிலிருந்து இருவரும் மலுமிச்சம்பட்டிக்கு வந்தனர். பாலமுருகன், மது வாங்கி, பண்ணைக்கு அருகிலுள்ள பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அங்கு மூவரும் மது அருந்தினர். அப்போது, முருகப்பெருமாளுக்கும் ஜெயராமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முருகப்பெருமாள், ஜெயராமனைத் தாக்கியதில், அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனால் பயந்து போன பாலமுருகனும் முருகப்பெருமாளும், ஜெயராமனின் உடலை ஒரு கல்லைக் கட்டி, அருகிலுள்ள கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பாலமுருகனும் முருகப்பெருமாளும் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் நேரில் சென்று, இந்தக் கொலைச் சம்பவம் குறித்து சரணடைந்தனர். இதையடுத்து, செட்டிபாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஜெயராமனின் உடலை மீட்க, கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர், 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை இறைத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனக்கு அனுப்பினர். இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் மலுமிச்சம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.