தூத்துக்குடி, போல் பேட்டையைச் சேர்ந்த 56 வயதான முருகானந்தம், எட்டயபுரம் நெடுஞ்சாலையில் ‘வி.வி. டவர்’ என்ற பெயரில் லாட்ஜ் நடத்தி வருகிறார். இந்த லாட்ஜில், தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த 50 வயதான பார்வதி துப்புரவுப் பணியாளராக வேலை செய்கிறார். பார்வதியின் 22 வயது மகன் செல்வம், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, நிரந்தர வேலையோ, வருமானமோ இல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், போதைப் பொருள் வாங்குவதற்காக, செல்வம் தனது தாய் பார்வதியிடம் அடிக்கடி பணம் கேட்டு, அவர் பணிபுரியும் லாட்ஜுக்கு வந்து செல்வது வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இதனைக் கவனித்த லாட்ஜ் உரிமையாளர் முருகானந்தம், “வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிகொண்டு, சரக்கு அடிக்க உங்க அம்மா கிட்ட பணம் கேட்டு லாட்ஜுக்கு ஓயாமல் வந்த, காலை வெட்டுவேன்,” என செல்வத்தை எச்சரித்து புத்திமதி கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம், “என் அம்மாகிட்டதான பணம் வாங்குறேன், நீ யார் என் காலை வெட்ட?  நீ என்ன வெட்டுறதுக்குள்ள, உன்ன நான் வெட்டுவேன்டா!” என சவால் விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்த சூழலில், ஆகஸ்ட் 9  ஆம் தேதி மாலை, கஞ்சா போதையில் இருந்த செல்வம், தனது நண்பர் ஒருவருடன் வி.வி. டவருக்கு வந்துள்ளார். மகன் போதையில் முருகானந்தத்துடன் பிரச்சனை செய்ய வந்ததை உணர்ந்த பார்வதி, அவரைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனால், செல்வம் தனது தாய் என்று கூட பார்க்காமல், அவரைத் சரமாரியாக தாக்கியிருக்கிறார். பின்னர், அடுத்த நொடியே லாட்ஜ் வாசலை நோக்கி நகர்ந்த செல்வம், ரிசப்ஷனில் நின்ற முருகானந்தத்தை அருவாளை எடுத்து சரமாரியாக வெட்டியிருக்கிறார்.  

இதில் நிலைகுலைந்த முருகானந்தம், உயிரை காப்பாற்றிக்கொள்ள லாட்ஜுக்குள் ஓடிய ஒளிந்துள்ளார்.  ஆனாலும், கொலைவெறியில் இருந்த செல்வம், அவரைத் துரத்திச் சென்று கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டியிருக்கிறார். போதாகுறைக்கு, செல்வத்துடன் வந்த அவரது நண்பரும்  முருகானந்தத்தை வெட்டியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற பார்வதிக்கும் வெட்டு விழுந்துள்ளது. பின்னர் இருவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் லாட்ஜுக்குள் ஓடி வந்தனர். அதற்குள் செல்வமும் அவரது நண்பரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

Advertisment

அதையடுத்து, படுகாயமடைந்த முருகானந்தமும், பார்வதியும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள செல்வம் மற்றும் அவரது நண்பரைத் தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் லாட்ஜுக்குள் புகுந்து, உரிமையாளரையும், பெற்ற தாயையும் போதை இளைஞர்கள் அரிவாளால் வெட்டிய இந்தச் சம்பவம், அதன் சிசிடிவி காட்சிகளுடன் சமூக வலைதளங்களில் வெளியாகி, தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி