சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்காக வெஜிடபிள் பிரியாணியில் கறி எலும்புத் துண்டை போட்டு இளைஞர்கள் ஏமாற்ற நினைத்த வினோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர் கண்டோன்மெண்ட் பகுதியில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு கடந்த ஜூலை 31ஆம் தேதி சுமார் 8 முதல் 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு சாப்பிடுவதற்காக வந்துள்ளனர். அப்போது அவர்கள் சைவ மற்றும் அசைவ பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளனர். உணவு வந்த சிறிது நேரத்திலேயே, அவர்களில் ஒருவர் தனது வெஜிடபிள் பிரியாணியில் இறைச்சி எலும்பு இருப்பதாக சத்தமாகக் கூறினார். மேலும், கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த இடமே பரபரப்பானது.

Advertisment

ஏதோ தவறு இருப்பதை உணர்ந்த உணவக மேலாளர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலைமையை கட்டுப்படுத்தினர். அதனை தொடர்ந்து, உணவில் இறைச்சி எலும்புத் துண்டு எப்படி இருந்தது என்பதை கண்டுபிடிக்க சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் இறைச்சி எலும்புத் துண்டை இன்னொருவருக்கு கடத்தி பின்னர் அதை அமைதியாக தனது சைவ பிரியாணியில் வைத் ஏமாற்றியது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த இளைஞர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து உரிய புகார் இல்லாததால் இளைஞர்கள் மீது எந்த வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தனது சமையலறையின் கண்டிப்பான உணவுப் பிரிப்பு நடைமுறைகளில் நம்பிக்கை கொண்ட உணவக உரிமையாளர் ரவிகர் சிங் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இது குறித்து உணவக உரிமையாளர் ரவிகர் சிங் கூறுகையில், ‘சமையலறையில் இறைச்சி தனித்தனியாக சமைக்கப்படுவதால், மாசுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. அவர்களுடைய பில் தொகை சுமார் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை இருந்தது. பில் தொகையை செலுத்துவதை தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்’ என்று கூறினார். 

Advertisment