விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கோத்தூர் ஐந்து கடை பஜார் பகுதியில் தீபாவளி தினத்தன்று (20.20.2025) சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் சிறுவர்களைத் தாக்கி பட்டாசு வெடிக்க விடாமல் தடுத்துள்ளனர். இதனையடுத்து மது போதையில் இருந்த இளைஞர்களைக் கைது செய்யவலியுறுத்தி அன்றைய தினமே காவல் நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரின் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இத்தகைய சூழலில் தான் பிணையில் வெளிவந்த இளைஞர்கள், மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த நிலையில் ஏற்கனவே இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த வினோத் உள்ளிட்ட 5 பேரின் வீடுகளுக்குள் நேற்று (23.10.2025) இரவு புகுந்து அவர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதோடு வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, மது மற்றும் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இளைஞர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து நிரந்தரமாகச் சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ராஜபாளையம் - தென்காசி இடையிலான பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து பொதுமக்களிடம், காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பொதுமக்களை குண்டுக்கட்டாகவும், தரதரவென இழுத்துச் சென்றும் போலீசார் கைது செய்தனர். மற்றொருபுறம் தொடர்ந்து அடாவடியில் ஈடுபடக்கூடிய இளைஞர்களையும் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் உறுதி அழித்தனர். இவ்வாறு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் காரணமாகத் தென்காசி - ராஜபாளையம் பிரதான சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. இதனால் ஏராளமான வாகனங்களும் அங்கு அணிவகுத்து நின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/24/vdu-road-block-2025-10-24-11-59-49.jpg)