திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தும்பலப்பட்டி கிராமத்தில் செங்கல் சூளை சேம்பரில் இருந்து இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது தும்பலப்பட்டி கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது.அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் அங்கு  கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். பணி நிமித்தமாக சூளைக்கு செல்வதாக  வீட்டில் சொல்லிவிட்டு சென்ற சரவணன் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் அவர் வீடு திரும்பாததால் அச்சமடைந்த அவருடைய குடும்பத்தார் பல இடங்களில் தேடி வந்தனர்.

Advertisment

இந்நிலையில் செங்கல் சூளையில் சரவணன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக தகவலறிந்து அங்கு சென்ற உறவினர்கள் உயிரிழந்துக் கிடந்த சரவணன் உடலைப் பார்த்து கதறி அழுதனர். காதில் ரத்தம் வந்த நிலையில் சரவணன் உடல் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த கீரனூர் போலீசார் விசாரணை நடத்தினர். சரவணன் உடல் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சரவணன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ள அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் உரிய விசாரணை நடத்தி இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Advertisment