sivakangai police incident Photograph: (sivakangai)
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் ஆறு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மதுரையை சேர்ந்த சிவகாமி என்பவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சிவகாமி வயது முதிர்ந்தவர் என்பதால் கோவில் தற்காலிக ஊழியர் அஜித் வீல் சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அஜித்திடம் சாவியை கொடுத்து காரை பார்க் செய்யுமாறு சிவகாமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அஜித்தும் அவர்களுடைய காரை ஓரிடத்தில் பார்க் செய்துவிட்டு சாவியை கொடுத்துள்ளார்.
சாமியை கும்பிட்டு விட்டு வெளியே வந்த சிவகாமி குடும்பத்தினர் காரில் இருந்த 10 பவுன் நகையை காணவில்லை என திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இளைஞர் அஜித்தை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக அஜித்தின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தனிப்படை காவலர்கள் ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ள மாவட்ட எஸ்பி ஆசித் ராவத், இந்த சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.