உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலையில் இருந்து ஆகஸ்ட் வரையிலான கன்வார் யாத்திரையை இந்துக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் நடத்துவார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட தூரம் நடந்து செல்வார்கள்.

இந்த நிலையில், இந்தாண்டில் நடைபெற்று வரும் கன்வார் யாத்திரையின் போது புனித நீர் சுமந்து செல்லும் அலங்கரிக்கப்பட்ட மூங்கில் மீது எச்சில் துப்பியதால் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த முஸ்கன் என்ற பெண், 31 லிட்டர் புனித கங்கை நீரை சுமந்து ஹரித்வாரில் இருந்து முசாபர்நகர் மாவட்டத்தின் புர்காசி நகருக்கு வந்து கொண்டிருந்தார். அவரோடு அவரது சகோதர அன்ஷுல் சர்மா 101 லிட்டர் புனித நீரை சுமந்து வந்திருந்தார். அப்போது முஸ்கன் ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது உஸ்மான் என்ற நபர், முஸ்கன் சுமந்திருந்த புனித நீர் கொண்ட மூங்கில் மீது எச்சிலை துப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மற்ற யாத்ரீகர்கள், உஸ்கானை சரமாரியாக அடித்து சம்பவ இடத்தில் கூடி போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், உடனடியாக அங்கு விரைந்து நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர். பல மணி நேர பேச்சுவார்த்தைக்கு யாத்ரீகர்களை அமைதிப்படுத்தி அவர்களை கலையச் செய்தனர். மேலும், அந்த பெண் தனது புனித யாத்திரையைத் தொடர ஹரித்வாரில் இருந்து ஒரு புதிய புனித நீர் கொண்ட கன்வாரையும் போலீசார் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், உஸ்மான் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், உஸ்மான் காது கேளாதவர், வாய் பேச முடியாதவர் மற்றும் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், யாத்திரையின் போது அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.