மத்திய பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள காக்னார் பகுதியில் அரசு சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள சி.சி.டி.வி. காட்சி ஒன்று மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர், சுகாதார மையத்தில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலைத் தொட்டு பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். பின்னர், அந்த உடலை அங்கிருந்து இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளார்.
தற்போது, அந்த சி.சி.டி.வி. வீடியோ வெளியானதையடுத்து, சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஆத்யா டாவார் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், இந்த வீடியோ கடந்த ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி பதிவானது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பிஜோரி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்திருக்கிறார். ஆனால், இரவு நேரம் என்பதால் பிரேத பரிசோதனை செய்யப்படாமல், அவரது உடல் அங்கிருந்த ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊழியர்கள் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர் உள்ளே நுழைந்து இந்த அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனிடையே, சம்பவம் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், உடனடியாக அந்த மர்ம நபரைக் கண்டறிய வேண்டிய நிலைக்கு காவல்துறையினர் தள்ளப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர படிதார் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து, தீவிரமாக அந்த நபரைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சம்பவத்திற்குக் காரணமானவர் டாங்கியாபட் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான நிலேஷ் பிலாலா என்பவர் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். உடனடியாக கிராமத்திற்குச் சென்ற காவல்துறையினர் நிலேஷ் பிலாலாவைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெண்ணின் உடல் மீது அத்துமீறி நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின், புர்ஹான்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவரிடம் மேல் விசாரணை நடத்த காவல்துறையினர் கஷ்டடியில் எடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியைக் கைது செய்திருந்தாலும், சுகாதார மையத்தின் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்த கேள்விகளை அப்பகுதி மக்களிடையே எழுப்பியுள்ளது.