ராமநாதபுரம், பட்டினம் காத்தான் பகுதியைச் சேர்ந்த 21 வயது திவ்யா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்ததால், தனது இரு குழந்தைகளுடன் தாய் கருப்பாயி வீட்டில் வசித்து வந்தார். ராமநாதபுரத்தில் உள்ள ஒரு வலை பின்னும் நிறுவனத்தில் பணிபுரிந்து, திவ்யா தனது குழந்தைகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், விருதுநகரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர், ராமநாதபுரத்தில் கொத்தனாராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருக்கம் அதிகரித்ததால், கருப்பசாமி அடிக்கடி திவ்யாவின் வீட்டிற்கு வந்து சென்றார். இது திவ்யாவின் தாய் கருப்பாயிக்குப் பிடிக்கவில்லை. “இனி எங்கள் வீட்டுப் பக்கம் வரக்கூடாது” என்று கருப்பசாமியை கருப்பாயி எச்சரித்தார். இதையடுத்து, திவ்யாவும் கருப்பசாமியை வீட்டிற்கு வரவேண்டாம் என்று கூறினார்.
இதனால் கருப்பாயி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த கருப்பசாமி, சம்பவத்தன்று இரவு திவ்யாவின் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர்களுடன் ஏற்பட்ட தகராறில், கருப்பாயியை வெளியே இழுத்து வந்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கருப்பாயி சரிந்து விழுந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததைப் பார்த்து, கருப்பசாமி அங்கிருந்து தப்பியோடினார்.
படுகாயமடைந்த கருப்பாயியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கருப்பாயி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கருப்பசாமியைத் தேடி வருகின்றனர்.