தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் 22 வயது சூர்யா. இவர் பேக்கரியில் மாஸ்டராகவும், சில நேரம் மீன்பிடித் தொழிலுக்கும் சென்று வந்துள்ளார். கடந்த 13ஆம் தேதி மாலை இவரது நண்பர்கள் நான்கு பேர் இரண்டு பைக்குகளில் வந்து சூர்யாவை அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு சூர்யா வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், தூத்துக்குடி - ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளபட்டி அருகே காட்டுப்பகுதியில் சூர்யா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தாளமுத்து நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தூத்துக்குடி டவுன் உதவி காவல் கண்காணிப்பாளர் மதன், தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் அருளப்பன், உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தாளமுத்து நகர் கணபதிபுரத்தைச் சேர்ந்த 22 வயதான உத்திரகண்ணன், சமீர் நகரைச் சேர்ந்த 23 வயது மகேந்திரன் செல்வம் மற்றும் மேல் அழகாபுரியைச் சேர்ந்த கிங் இசக்கி முத்து, மாயா மாரிமுத்து ஆகிய நான்கு பேர் சூர்யாவை அழைத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, உத்திரகண்ணன், மகேந்திரன் செல்வம் ஆகிய இருவரை முதலில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு உத்திரகண்ணனின் சகோதரிக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த விழாவுக்கு வந்திருந்த சூர்யா, உத்திரகண்ணனின் உறவுக்கார இளம்பெண்ணிடம் செல்போன் எண்ணை வாங்கி, ரகசியமாகப் பேசி தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை அறிந்து கண்டித்தபோது, உத்திரகண்ணனுக்கும் சூர்யாவுக்கும் வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது, உத்திரகண்ணனை நோக்கி சூர்யா பீர் பாட்டிலை வீசி எறிந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சூர்யாவைக் கொலை செய்ய முடிவெடுத்த உத்திரகண்ணன், நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, 13ஆம் தேதியன்று உத்திரகண்ணன், தனது கூட்டாளிகளான மகேந்திரன் செல்வம், கிங் இசக்கி முத்து, மாயா மாரிமுத்து ஆகியோருடன் சூர்யாவைச் சந்தித்து, அவரிடம் சமாதானம் பேசுவதைப் போல பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி- ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளபட்டி காட்டுப்பகுதியில், அந்தோணியார் கோயிலுக்கு தென்புறம் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும், திட்டமிட்டப்படி நான்கு பேரும் சூர்யாவைச் சுற்றி வளைத்து தாக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து உயிர் தப்பிக்க, சூர்யா வெள்ளபட்டி கிராமத்தை நோக்கி ஓடியுள்ளார். ஆனாலும், ஓட ஓட விரட்டிச் சென்று சூர்யாவைக் கத்தியால் குத்திவிட்டு, நான்கு பேரும் பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சூர்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, உத்திரகண்ணன், மகேந்திரன் செல்வம், கிங் இசக்கி முத்து, மாயா மாரிமுத்து ஆகிய நான்கு பேரையும் போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
திருமண வீட்டில் இளம்பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த பேக்கரி மாஸ்டர் சூர்யாவைக் கொலை செய்யத் திட்டமிட்டு, சமாதானம் பேசுவதைப் போல அழைத்துச் சென்று, மது போதையில் கூட்டாளிகள் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி