ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டம், சரபன்கா நுவாகாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் தேபாசிஸ் பத்ரா. இவர் அங்குள்ள சமுதாய சுகாதார மையத்தில் பார்மசிஸ்ட்டாக(Pharmacist) பணியாற்றி வருகிறார். தேபாசிஸ் பத்ராவுக்கு ஏற்கனவே ஒரு சுகாதாரப் பணியாளருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, சோனாலி தலேய் (25) என்ற பெண்ணை தேபாசிஸ் பத்ரா திருமணம் செய்து கொண்டார். திருமணமான சிறிது காலம் இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தேபாசிஸ் பத்ராவுக்கும் அவரது இரண்டாவது மனைவி சோனாலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், அவ்வப்போது குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக சண்டைகளும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூலை 19 அன்று, சோனாலியின் தாய் சுமதி தலேய் (55) தனது மகளைப் பார்க்க வந்திருந்திருக்கிறார். ஆனால், மறுநாள், தேபாசிஸ் பத்ரா தனது மனைவி மற்றும் மாமியார் இருவரையும் காணவில்லை என்று குலியானா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், காணாமல் போன சோனாலி மற்றும் அவரது தாய் சுமதியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனால், இது தொடர்பாக எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது.
இச்சூழலில், ஜூலை 28 ஆம் தேதி காட்டு யானைகள் கூட்டம் ஒன்று தேபாசிஸ் பத்ராவின் வீட்டின் பின்புறத்தில் உள்ள அவரது தோட்டத்திற்குள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்றன. யானைகளால் ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட கிராமவாசிகள் தோட்டத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது, தோட்டத்தில் வித்தியாசமான முறையில் இரண்டு வாழைக் கன்றுகள் நடப்பட்டிருந்ததைக் கண்டனர். இதனால் சந்தேகமடைந்த கிராமவாசிகள், அருகே கிடந்த ஒரு குச்சியை எடுத்து வாழைக் கன்று நடப்பட்ட இடத்தில் குத்திப் பார்த்தனர். குச்சி ஆழமாக உள்ளே சென்றது. பின்னர், அந்த இடத்தை சிறிது தோண்டியபோது துர்நாற்றம் வீசியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, சரபன்கா நுவாகாவ் கிராமவாசிகள் குலியானா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் தோண்டி ஆராய்ந்தனர். அப்போது, அந்தக் குழியில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட இரு பெண்களின் அழுகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை காணாமல் போன சோனாலி மற்றும் அவரது தாய் சுமதி என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, தேபாசிஸ் பத்ராவை போலீசார் விசாரித்தபோது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
விசாரணையில், "ஜூலை 19 அன்று எனக்கும் சோனாலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டிற்கு வந்த மாமியார் சுமதியுடனும் சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து, கல்லால் அடித்து மனைவி சோனாலியையும், மாமியார் சுமதியையும் கொன்று விட்டேன். பின்னர், உடல்களை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி, வீட்டின் பின்புறத்தில் உள்ள எலுமிச்சைத் தோட்டத்தில் புதைத்து, சந்தேகம் வராமல் இருக்க வாழை மரங்களை நட்டு விட்டேன்," என்று தேபாசிஸ் அதிர்ச்சிகரமான வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதனைத் தொடர் உடலைகளை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தேபாசிஸ் பத்ராவை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பேசிய பரிபாடா உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) தீபக் கோச்சயாத், "இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். மீட்கப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கை கிடைத்த பின்னரே முழு விவரங்கள் தெரியவரும். இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது, ஒரு தனி நபர் இரண்டு நபர்களைக் கொன்று, 10 அடி ஆழக் குழி தோண்டி உடல்களைப் புதைப்பது சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது. எனவே, இந்தக் குற்றத்தில் மற்றவர்களும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்," என்று தெரிவித்தார்.இந்தச் சம்பவம் ஒடிசா மாநிலத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.