திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகில் 27 ஆம் தேதி வடமாநில இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் திருத்தணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வடமாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருத்தணி காவல்நிலைய போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் வடமாநில இளைஞரின் பெயர் 34 வயதுடைய சூரஜ் என்றும், அவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்துப் பகீர் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

Advertisment

சம்பவத்தன்று வடமாநில இளைஞர் சூரஜ் சென்னையில் இருந்து மின்சார ரயிலில் திருத்தணி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். திருவாலங்காடு ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் 17 வயதுடைய 4 சிறுவர்கள் ரயிலில் ஏறியுள்ளனர். மேலும், ரீல்ஸ் மோகத்தால் ரயிலில் கெத்து காட்ட கத்தியுடன் ஆடியபடி அவர்கள் அதனைத் தங்களது செல்போனிலும் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு சிறுவன் ரயிலில் பயணம் செய்த சூரஜை வெட்டுவதுபோல கத்தியைக் காட்டி மிரட்ட, மற்றொரு சிறுவன் அனைத்தையும் ரீல்ஸ் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார்.

பின்னர் திருத்தணி ரயில் நிலையம் வந்தபிறகு சூரஜ் அங்கிருந்து நடந்து சென்றிருக்கிறார். ஆனால் அப்படியும் விடாத அந்த நான்கு சிறுவர்களும் சூரஜைப் பின்தொடர்ந்து வந்து தனியே இழுத்துச் சென்று, அங்கு வைத்து மூவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அதனை மற்றொரு சிறுவன் ரீல்ஸ் வீடியோவாக எடுத்துள்ளார். சூரஜ் தன்னை விட்டுவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும், இரக்கமின்றி சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisment

இதனைத் தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், திருவாலங்காடு அரிச்சந்திராபுரத்தைச் சேர்ந்த நந்தகோபால், திருத்தணி அருகே நெமிலியைச் சேர்ந்த சந்தோஷ், அரக்கோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து திருவள்ளூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின்னர் நந்தகோபால், விக்னேஷ், சந்தோஷ் ஆகிய மூவரையும் ஜனவரி 9 ஆம் தேதி வரை சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரக்கோணத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் சந்தோஷ் தற்போது படித்து வருவதால், இளஞ்சிறார் நீதிமன்ற நீதிபதி அவரைச் சொந்தப் பிணையில் விடுவித்து அவரது பெற்றோருடன் அனுப்பியுள்ளார்.

ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டியது அடிப்படை உரிமையாகும். ஆனால், சமீபத்தில் நடந்த சம்பவங்கள் ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரிதும் குறைபாடுடையவையாக இருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

ரயில் பயணிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளின்படி, ரயில்வே போலீசார் சீரான முறையில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. குறிப்பாக, பட்டாக்கத்தி போன்ற ஆபத்தான ஆயுதங்களுடன் பயணம் செய்த இளைஞர்களை ரயில்வே போலீசார் சரியான நேரத்தில் பிடித்திருந்தால், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுத்திருக்க முடியும் என்று பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சென்னை முதல் திருத்தணி வரையிலான ரயில் பாதையில் ரயில்வே போலீசாரின் அலட்சியப் போக்கு காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தனிப்பட்ட பயணிகளின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், சமூகத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் பாதிக்கும் பெரிய பிரச்சினையாகும். பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் ரயிலில் பயணம் செய்யும் போது அச்ச உணர்வுடனேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது

ஆகையால், இதுபோன்ற பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்னரே ரயில்வே நிர்வாகமும் ரயில்வே போலீசாரும் உடனடியாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.