கோவையிலிருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்ல மேட்டுப்பாளையத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். இதேபோல், மலைகளின் அரசியான ஊட்டிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாவுக்காகவும், பல்வேறு பணி நிமித்தங்களுக்காகவும் பயணம் செய்து வருகின்றனர். இதனால், மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும்.
இந்த நிலையில், 19 ஆம் தேதி மாலை மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் உள்ள பவானி ஆற்றுப்பாலத்தின் கைப்பிடிச் சுவர் மீது ஆபத்தான முறையில் ஏறி நின்று இளைஞர் ஒருவர் அட்ராசிட்டி செய்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட பொதுமக்களையும் தகாத வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர் ஒருவர் அவரைப் பிடிக்க முற்பட்டபோது, ‘குதிச்சிருடா கைப்புள்ள’ என்று வடிவேல் பட பாணியில் ஆற்றில் குதித்து அந்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளார். திடீரென ஒரு இளைஞர் ஆற்றுப்பாலத்தின் கைப்பிடிச் சுவர் மீது ஏறி நின்று அத்துமீறி நடந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னக்காமனன் கூறுகையில், “ஆபத்தான முறையில் இதுபோன்ற செயல்களில் எவரும் ஈடுபடக் கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஆற்றில் குதித்து, அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்து தப்பியுள்ளார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.