கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகே உள்ள பெரியமந்திரிபாளையம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், அந்தப் பகுதியில் உள்ள தனியார் பஞ்சு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 6 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் இருந்த இரு வாலிபர்கள் அவரைப் பின்தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் தொல்லை கொடுத்தனர்.
மேலும் அந்த வாலிபர்கள் ஊருக்குள் நுழைந்ததும் பயந்து போன இளம் பெண், அங்கிருந்த பொதுமக்களிடம் விவரத்தை கூறியிருக்கிறார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஊர் மக்கள் உடனடியாக ஒன்றுதிரண்டு வாலிபர்களைச் சுற்றி வளைத்தனர். பிடிபடுவோம் என்பதை உணர்ந்த இருவரும் தப்பி ஓடி, அருகில் இருந்த திறந்தவெளி கிணற்றில் பாய்ந்து குதித்தனர்.
சுமார் 60 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் குதித்த இருவரும், தண்ணீரில் மூழ்குவதற்கு முன் கிணற்றோர மரக்கிளையில் சிக்கிக் கொண்டனர். இதைக் கண்ட ஊர் மக்கள் உடனடியாக சுல்தான்பேட்டை காவல்துறை மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு உதவியுடன் இருவரையும் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (25), கோட்டைசாமி மகன் சரண் (22) என்பவர்கள் என்பதும், ஜல்லிக்கட்டு பகுதியில் உள்ள தனியார் காலான் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
மது போதையில் இருந்ததால், இருவரையும் சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக போதைப் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளதால், இளம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக ஊர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Follow Us