Youth Congress meeting ends in caste discrimination-clash Photograph: (meeting)
சவக்குழிக்குள் போனாலும் சாதிய பிரச்சனை விடாது போலும். தென்காசி மாவட்டத்தின் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இளைஞர் காங்கிரசின் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் கூட்டம் ஆக. 20 அன்று நடந்தது. இவர்களோடு மாவட்டக் காங்கிரசின் நிர்வாகிகளும் கூட்டத்தில் இருந்தனர். இந்தக் கூட்டத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்ய பிரகாஷ் பங்கேற்று அறிமுகக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
அதுசமயம் தற்போது தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் இளவரசன் கட்சியினருடன் கூட்டத்திற்கு வந்தவர் இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நடைபெறுவதாகக் கூறிவிட்டு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரான எனக்கு தகவல் கூறாமல் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. நான் தாழ்த்தப்பட்ட தேவேந்திர குல வேளாளர் குலம் சார்ந்தவர் என்பதால் என்னை புறக்கணிக்கிறீர்களா என்று கூறியதையடுத்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு அனல் பற்றிக்கொண்டது. நீங்கள் குறிப்பிடுவதுபோல இல்லை. மாநிலத் தலைவர் வந்திருக்கிறார். நீங்கள் இல்லாததால் இருப்பவர்களை வைத்து கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று கூட்டத்தில் இருந்தவர்கள் எதிர்வாதம் செய்திருக்கிறார்கள். இரு தரப்பிலும் வார்த்தைகள் தொடர்ந்ததால் கூட்டத்தில் பரபரப்பு, இரு தரப்பிலும் தள்ளுமுள்ளாகி மோதல் ஏற்படும் சூழ்நிலையில், இந்தக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று தெரிவித்த மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன் தனது ஆதரவாளர்களோடு வெளியேறியிருக்கிறார். மோதல் விவகாரம் முற்றிய நிலையில் படபடவென உள்ளே நுழைந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் நடந்த இந்த சம்பவம் மாவட்ட அரசியல் மட்டத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியிருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/28/a5013-2025-08-28-15-11-59.jpg)
நாம் நடந்தவைகள் குறித்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசனிடம் பேசியபோது, நடந்தவைகளை விவரித்தார்.
தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி கடந்த முறை தாழ்த்தப் பட்டோர்க்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அப்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடத்திய ஆன்லைன் தேர்தலில் பங்கேற்ற நான் வெற்றி பெற்றேன். கடந்த 3 வருடம் பதவி வகித்தேன். அதன்பின் பதவி காலம் முடிந்ததால் தற்போது தென்காசி மாவட்டத்தின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி பொதுவானது என்று அறிவிக்கப்பட்டது. அண்மையில் அகில இந்திய கமிட்டி ஆன்லைனில் நடத்திய தேர்தலில் பங்கேற்ற நான் 4,500 வாக்குகளில் வெற்றி பெற்றேன். எனது அணியினரும் நிர்வாகியாக வெற்றி பெற்றார்கள். அகில இந்திய கமிட்டியால் 2 மாதத்திற்கு முன்புதான் இந்த வெற்றி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக இளைஞர் காங்கிரசின் மாநிலத் தலைவர் சூரியபிரகாஷ் ஆக. 20 அன்று அருகிலிருக்கும் ஆலங்குளம் நகரிலுள்ள காங்கிரஸ் நிர்வாகியான எஸ்.கே.டி. காமராஜ் இல்ல விழாவிற்கு வருகை தந்திருக்கிறார். அதற்கு முன்னதாக அவர் தேர்தலுக்கு பின்பு இளைஞர் காங்கிரஸ் அறிமுகக் கூட்டம் அன்றைய தினம் போடணும் என்று எனக்கு எஸ்.எம்.எஸ். மட்டுமே அனுப்பினார். நான், தொலைதூர வெளியூரில் இருப்பதால் இப்ப வேண்டாம் பின்பு போடலாம் என்று அவருக்கு பதில் மெசேஜ் அனுப்பினேன். அதன் பின் அவர், நான் போட்டது போட்டதுதான். துணைத் தலைவர் முத்துக்குமாரை வைத்து கூட்டத்தை நடத்துகிறேன் என்று தலைவர் சூர்ய பிரகாஷ் எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார். இதற்கிடையே நெல்லை எம்.பி. ராபர்ட் ப்ரூசின் மகனும் மாவட்ட இளைஞர் காங்கிரசின் பொருப்பாளருமான ஜெகன் ராபர்ட் ப்ரூஸ் என்னைத் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, நான் அவரிடம் நிலைமையைச் சொன்னேன். இல்ல தம்பி, வந்த மாநிலத் தலைவரும் கூட்டத்தை நடத்தியாகணும்னு சொல்லிட்டார் என்று என்னிடம் தெரிவித்தார். நான் திருவனந்தபுரத்திலிருந்து அன்றைய தினம் காலையில்தான் வந்திருந்தேன். ஆனால் அவங்க இளைஞர் காங்கிரஸ் கூட்டம்ணு மாவட்டத் தலைவரான என்னுடைய படம், பெயர் இல்லாமல் துணைத் தலைவரைக் கொண்டு போஸ்டர் அடித்திருக்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/28/a5015-2025-08-28-15-12-40.jpg)
நான் கூட்டத்திற்கு போனப்ப அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து என்னுடைய நிலைமையச் சொன்னேன். நீங்க அடிச்ச போஸ்டர்ல என் பெயரோ படமோ போடல. தலைவரான எனக்கு தகவலும் சொல்லல்ல. என்னை புறக்கணிக்கிறீங்க . தேர்தல்ல நானும் என்னுடைய அணி நிர்வாகிகளும் ஜெயிச்சு வந்துட்டோம். ஆனா தலைவர் சூர்யபிரகாஷ் அணி நிர்வாகிகள் தோற்க நேர்ந்தது. அந்த நிகழ்வை அவர் மனசுல இருக்கும் போல, அந்தக் கோபம். நான் தாழ்த்தப்பட்ட சமுதாயமான தேவேந்திர குலம் என்பதால நீங்க என்னைய ஒதுக்குறீகன்னு சொன்னப்ப, கூட்டத்துல கூச்சல் குழப்பம் ஆயிடுச்சு. இதனால அவர்களுக்கும் எங்களுக்கும் வாக்குவாதம் பெருசாயிடுச்சி. நீங்க போன்ல பேசல. மெசேஜ் தான போட்டீங்க. நா இல்லாம நடத்தனும்ணு இந்தக் வேலைய பாக்கீகன்னு நா சொன்னதும் மாநிலத் தலைவர் அப்படிலாம் இல்லன்னு மறுத்துப் பேசினார். ஆனாலும் கூட்டத்துல ரெண்டு தரப்புலயும் வாக்குவாதம் ஆனப்ப காங்கிரஸ் நிர்வாகி சட்டநாதன், சத்தம் போடாதீங்க, கட்சிய அசிங்கப்படுத்திட்டீகன்னு வாக்குவாதத்தக் கட்டுப்படுத்தினார். மாநிலத் தலைவரோட வந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் உள்ளவர்களிடம் பேசி சமாதானப் படுத்திக் கூச்சலைக் கட்டுப்படுத்த முயன்றனர். இரண்டு தரப்பும் மோதிக்கொள்ள நெலம. என்னால இங்க எதும் நடந்துறக் கூடாதுன்னு, நா இந்தக் கூட்டத்தப் புறக்கணிக்கேன்னு சொல்லிட்டு என்னோட வந்தவர்களோட வெளியேறிட்டேன். கூட்டத்துல கூச்சலும் குழப்பமும் அதிகமாக பதறிப்போய் உள்ள வந்த போலீசார் கூட்டத்தக் கட்டுப்படுத்தி அவங்கள எல்லாம் வெளியேற்றினதுக்கப்புறம் தான் அமைதி ஆனாது என்றவர்.
மாநிலத்துல இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் தாழ்த்தப்பட்ட தேவேந்திர குலத்தைச் சேர்ந்த நான் ஒருவர் மட்டுமே இருக்கிறேன். கட்சியில இப்ப சாதிப் பாகுபாடு ஓடிட்ருக்கு. இத மாநில காங்கிரஸ் தலைவரும் கண்டுக்கல்ல. அதனால நாங்க இந்த சாதிப் பாகுபாடு பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தெரியப்படுத்தி தலைவர் ராகுல் காந்தி வரை சம்பவத்தைக் கொண்டு போகவிருக்கிறோம் என்றார் வருத்தமான குரலில்.
இதுகுறித்து இளைஞர் காங்கிரசின் துணைத் தலைவர் முத்துக்குமாரிடம் பேசிய போது, அவர் சொல்ற மாதிரி இல்ல. பொதுவா மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெயர் படத்தை மட்டுமே போட்டு போஸ்டர் அச்சடிக்கப்பட்டது. அதில் என் பெயர் உட்பட யார் பெயரும் போடப்படல. என்று எதார்த்தத்தைச் சொன்னார்.
கூட்டத்தில் இருந்தவர்கள் மற்றும் மாநிலத் தலைவர் சூர்யபிரகாஷ் தரப்பினரும், மாநில காங்கிரஸ் தலைவர் வந்தபோது மாவட்டத் தலைவர் ஊரிலில்லை. அவர் தொலைதூரத்தில் இருந்தார். வரமுடியாத சூழல். கூட்டம் நடத்தியே ஆக வேண்டும். எனவே தலைவர் வந்ததனால இருப்பவர்களைக் கொண்டு முதல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அவர்கள் சொல்வது போன்று எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றனர்.
எந்த ஒரு பிரச்சனைன்னாலும் சந்தேகம்ணு வந்துட்டா, தாமதப்படுத்தாம தீர்த்து வைக்கணும் பாஸ்.