நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரைகேட் நால்ரோடு பகுதியில் திருச்செங்கோடு நகர காவல் நிலைய போக்குவரத்து காவல்துறை முதல் நிலை காவலர் கந்தசாமி பணியில் இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் கொக்கராயன் பேட்டை ரோட்டில் இருந்து தள்ளாடிய படியே வந்த ஒரு வாலிபர் சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட போக்குவரத்து முதல் நிலை காவலர் கந்தசாமி கீழே விழுந்தவரை தூக்கி விடச் சென்றுள்ளார். ஆனால், அதிக போதையில் இருந்த அந்த இளைஞர் போக்குவரத்து காவலரை தரைகுறைவாகப் பேசியுள்ளார். மேலும், ஆம்புலன்ஸில் ஏறுமாறு காவலர் முத்துசாமி கூற, அடாவடியாக நடந்துகொண்ட அந்த இளைஞர் “உன்னால என்னடா பண்ண முடியும்.. முடிஞ்ச பண்றா..” என்று ஆபாசமாகப் பேசி அவரது மார்பின் மீது கைவைத்து தள்ளியுள்ளார்.
இதை கவனித்த பொதுமக்கள் போக்குவரத்து காவலரிடம் தவறாக நடந்துகொண்ட அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். உடனடியாக மற்ற போக்குவரத்து காவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செங்கோடு நகர காவல் நிலைய போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடமிருந்து போதை ஆசாமியை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து போதையில் போக்குவரத்து காவலரைத் தாக்கிய இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஹரிஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும், காவலரைத் தாக்குவதற்கு முன்பு அதிகமான மது போதையில் கொக்கராயன் பேட்டை ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கீழே விழுந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுச் செய்த போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மதுபோதையில் வந்த இளைஞர் காவலரைத் தாக்கி அட்ராசிட்டியில் ஈடுபட்டது என அங்கு நடந்த அனைத்தையும் அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/06/1-2025-10-06-17-42-25.jpg)