சூலூர் அருகேயுள்ள சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர், அன்னூர் அருகே சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த முன்தினம் மதியம், விடுதியிலிருந்து வெளியே வந்த மாணவர், சொக்கம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் பயண உதவி (லிப்ட்) கேட்டு ஏறியுள்ளார்.அந்த நபர், மாணவனை சூலூர் அருகே காடாம்பாடி வி.ஐ.பி. நகர் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதற்கு மறுத்த மாணவனை அந்த நபர் மரக்கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மாணவர், ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் அருகிலுள்ள சாலையில் கிடந்துள்ளார்.அந்த வழியாகச் சென்றவர்கள் மாணவனை மீட்டு, சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததுடன், அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.சூலூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மாணவனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற நபர், கோடாங்கிப் பாளையம் ஆராக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என்பது தெரியவந்தது.விசாரணையில், அந்த இளைஞர் மாணவனை கருமத்தம்பட்டி வழியாக அழைத்துச் சென்று, சோமனூரில் உள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்தியதாகவும், பின்னர் ஆள் நடமாட்டமற்ற வீட்டுக்கு அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்றதாகவும், மாணவர் மறுத்ததால் அவரை மரக்கட்டையால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, சூலூர் காவல்துறையினர் அவரைக் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.