வேலூரைச் சேர்ந்த 23 வயது லாவன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது, அவருக்கு நிக்கிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவர்கள் நெருங்கிய தோழிகளாகி, அவ்வப்போது விடுதிகளில் அறை எடுத்து தங்கி, ஒன்றாக மது அருந்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 27ஆம் தேதி, மது அருந்துவதற்காக லாவன்யாவும், நிக்கிதாவும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, நிக்கிதா தனியாக வராமல், தனது நண்பர்களான மனாசே (வயது 29) மற்றும் ஆக்னசே (வயது 30) ஆகியோரை அழைத்து வந்திருக்கிறார். பின்னர், நால்வரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதிக அளவில் மது அருந்தியதால், நாள்வரும் சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, லாவன்யா தனது அறையில் தூங்கச் சென்றிருக்கிறார். காலையில் எழுந்து பார்த்தபோது, தான் ஆடைகளின்றி நிர்வாணமாக இருப்பதைக் கண்டு லாவன்யா அதிர்ந்துள்ளார். அவரது பக்கத்தில் நிக்கிதாவின் நண்பர் மனாசேவும் ஆடைகளின்றி உறங்கியுள்ளார். அவரைத் தட்டி எழுப்பி விசாரித்தபோது, “போதையில் எனக்கு எதுவும் தெரியவில்லை, அதனால்தான் இங்கு படுத்துத் தூங்கிவிட்டேன்,” என்று கூறி, லாவன்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
ஆனால், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை உணர்ந்த லாவன்யா, தனது தோழி நிக்கிதாவிடம் கேட்டிருக்கிறார்.ஆனால், நிக்கிதா தனக்கு எதுவும் தெரியாது என நழுவியுள்ளார். இதனால் மனமுடைந்த லாவன்யா, அவர்களுடன் சண்டையிட்டுவிட்டு, மிகுந்த மன உளைச்சலுடன் சொந்த ஊரான வேலூருக்குத் திரும்பியுள்ளார். பின்னர், வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, லாவன்யா கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இந்தச் சம்பவம் லாவன்யாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும், அவர்கள் அதிர்ச்சியடைந்து, வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவம் சென்னையில் நடந்ததால், புகாரை சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். அதன்பேரில், சென்னை வந்த லாவன்யா ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் விவசாயத் துறையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்த மனாசேவையும், இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த நிக்கிதாவையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னையில் மதுபோதையில் மயங்கி கிடந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.