திருப்பூர், மங்கலம் பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்தச் சிறுமி மங்கலம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி சிறுமியின் பெற்றோர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிறுமியின் தந்தை வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், தாய் அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மறுநாள் காலை, சிறுமி வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது, மங்கலம் அருகே பூமலூரைச் சேர்ந்த தொழிலாளியான பாலமுருகன் (34) என்பவர், சிறுமிக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி, மயக்க மருந்து கலந்த தேநீர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தத் தேநீரை அருந்திய சிறுமி மயங்கி விழுந்தார். பின்னர், பாலமுருகன் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. அவரை கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுமியிடம் விசாரித்தபோது, பாலமுருகன் கொடுத்த தேநீரை அருந்தியதும் தனக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் தன்னை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அதன்பின் நடந்தவை தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின், கே.வி.ஆர். நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்தனர்.
13 வயது சிறுமிக்கு தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.