நெருக்கமாக இருந்த புகைப்படங்களை காட்டி முன்னாள் காதலன் மிரட்டுவதாக அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ஒன்றாக படித்து வந்த பாதிக்கப்பட்ட பெண்ணும், ராம்குமார் என்பவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். அதன் பின்னர், அந்த பெண் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வரும் நிலையில், காதலன் ராம்குமாரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் தனது காதலை அந்த பெண் துண்டிக்க முடிவெடுத்துள்ளார்.
அதன்படி, கடந்த மார்ச் மாதம் முதல் ராம்குமாருடன் அந்த மாணவி பேசுவதை தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காதலிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட மாணவியை ராம்குமார் மிரட்டி வந்ததாகவும், அநாகரிமாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதில் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி, ராம்குமார் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவியை மிரட்டிய முன்னாள் காதலன் ராம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (32) என்பவரை கடந்தாண்டு டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்தனர். இந்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அவருக்கு 30 ஆண்டுகள் குறைப்பு இல்லாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி ராஜலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார். அதோடு ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.