Advertisment

"தேர்தல் காலத்தில் மட்டுமே இளைஞர்கள்  அரசியலுக்கு ஈர்க்கப்படுகிறார்கள்!-ஐ.நா. மாநாட்டில்  ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அழைப்பு !

AZ

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு மையத்தின் சார்பில் 5-வது சர்வதேச இளைஞர் மன்றத்தின் விழா நடைபெற்றது. ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இந்தியாவில் இருந்து சார்லஸ் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும் சமூக சேவகருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை அழைத்திருந்தனர். அந்த மாநாட்டில்  கலந்து கொண்டார் ஜோஸ் சார்லஸ்.

Advertisment

அண்மைக்காலமாக பாஜகவுக்கு எதிரான அரசியலை புதுச்சேரியில்  கட்டமைத்து வருகிறார் சார்லஸ். அதனால், எந்த மாதிரி அரசியலை அவர் பேசப்போகிறார் என்று மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் இளைஞர்கள் உற்று கவனித்திருக்கிறார்கள்.

மாநாட்டு விழாவில் பேசியதாவது"தமிழ் நிலத்திலிருந்து நான்  வந்துள்ளேன். எங்கள் பெருநிலத்தின் வரலாறு மன்னர்களின் வெற்றிகளால் எழுதப்படவில்லை. மாறாக,  புலவர்களின் கவிதைகளாலும், புரவலர்களின் ஆரவாரமற்ற கொடையாலும் எழுதப்பட்டுள்ளது. சங்ககாலத்தைச் சேர்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவனான வேள்பாரியின் கதை உங்களுக்குத் தெரியும். தமிழ் நிலத்தின்  சங்கப்பாடலில்,

'முல்லைக் கொடியைக் காத்தான் பாரி.அந்த மன்னன் தன் தேரையே தியாகம் செய்து, ஏறிட இடமின்றி தவித்த முல்லை கொடியைத் தாங்கியதாக' சொல்லப்பட்டுள்ளது. 

Advertisment

அந்தச் செயல் கருணையும், காவலும் கரம்கோர்த்ததன் அடையாளம். ஓர் அரசனாக தன்னுடைய பொறுப்பு என்ன என்பதை உணர்ந்ததால் தான் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவர் நினைவில் நிற்கிறார். அவரின் செயலைப் போல இந்த உலகை நாம் பாதுகாக்க வேண்டும். தலைமைக்கான உண்மையான அளவுகோல் என்ன தெரியுமா? மிகவும் பாதிக்கப்பட்டவர்களை நீங்கள் எவ்வளவு கருணையுடன் பாதுகாக்கிறீர்கள் என்பதே ஆகும்.

 நம்முடைய  பலவீனமான சமூகத்தின்  நிலையான வளர்ச்சி இலக்குகள் நமக்கு ஒரு வரைபடத்தைத் தருகின்றன. ஆனால்  முதல் படியை எடுக்க வைக்கத் தைரியம் இல்லையென்றால் அந்த வரைபடத்தால் பலனில்லை. பயணம் என்பது நம் காலடியின் கீழ் இருந்து தொடங்க வேண்டும்.செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக ஊடகங்களால் இயக்கப்படும் புதிய தொழில்துறை புரட்சியில் இளைஞர்களாகிய நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள் ; வளர்ச்சி அடைந்து வருகிறீர்கள். பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது.

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது எவ்வளவு முக்கியமானதோ, நீராவி எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது எவ்வளவு முக்கியமானதோ அதற்கு இணையாக சமூக வலைதளங்களும், மெய்நிகர் நகரங்களும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவும் மனிதகுலத்தின் மிக கடினமான சிக்கல்களுக்கு தீர்வைத் தருகின்றன.

இந்தியாவில் புதிய கண்டுபிடிப்பாளர்கள், வேளாண் கண்டுபிடிப்பாளர்கள் வெறும் செல்போன் கேமரா மூலம் படமெடுத்து பயிர்களை தாக்கும் நோய்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு உதவக்கூடிய வகையில் பலரது வாழ்வாதாரங்களை காப்பாற்றி வருகின்றனர்.2023-ம் வருடத்திய உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கை என்ன சொல்கிறது என்றால், 2027-ம் ஆண்டில் உலகில் 8.3 கோடி பழைய வேலைகள் அப்புறப்படுத்தப்பட்டு 6.9 கோடி புதிய வேலைகள் அதாவது எதிர்கால திறன்களை மையமாக கொண்ட வேலைகள் உருவாகும் என்று கூறுகிறது.

குறிப்பாக நம்முடைய பகுப்பாய்வு சிந்தனை, சிக்கல்களை ஆக்கபூர்வமாக தீர்க்கும் திறன் மற்றும் தரவுகளை கையாளும் மேதமை  முக்கியம். இன்று, பல இளைஞர்கள் அரசியலில் இருந்து விலகி நிற்கலாம் என நினைக்கின்றர். ஏன்? காரணம்,  என்னவென்றால், உண்மையாக சிந்திப்பவர்களை தண்டிக்கக் கூடிய வகையில் ஒரு சமூக கட்டமைப்பை நாம் உருவாக்கி வைத்துள்ளோம்.  பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை மட்டுமே மதிக்கும் ஒரு பண்பாட்டை உருவாக்கியுள்ளோம். நம்பிக்கைகளை பின்தொடர்பவர்களை அல்ல ! அதே போன்று தேர்தலின் போது மட்டுமே அரசியல் கட்சிகளால் இளைஞர்கள் நினைவுகூரப்படுகிறார்கள் ; ஈர்க்கப்படுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கான துரோகம்.நீங்கள் நாளைக்கான தலைவர்கள் அல்ல ;  நீங்கள் இன்றைக்கான தலைவர்கள்.

எது சிதைக்கப்பட்டுள்ளதோ அதனை நோக்கி கேள்வி எழுப்பும் தார்மீக தெளிவு, எல்லைகளை கடந்த கற்பனைத் திறன், நியாயமான ஒன்றை உருவாக்கும் துணிச்சல் ஆகியவற்றை கொண்டவர்கள் தான் நீங்கள். எங்களுடைய சார்லஸ் குழுமம் மற்றும் மார்ட்டின் அறக்கட்டளை வாயிலாக தீர்வுகளை உருவாக்கும் பயணத்தில் உங்களோடு இணைந்து நடைபோட உறுதி ஏற்கிறேன். அரசின் நிர்வாகமும், செயல்பாடுகளும் முன்காலத்தைப் போன்று மீண்டும் மதிப்புடன் திகழ வேண்டும் என்று விரும்புகிறோம்.

சங்கக் கவிஞர் கபிலர் கூறியதுபோல்:

அன்புடைமை ஆளும் உலகம்

 அன்பை நம் தலைமையின் அடிப்படையாக்குவோம்.

ஒன்றுமைப்பாட்டை நம் பலமாக்குவோம்.

சேவையை நம் பாதையாகக் கொள்வோம்.

 அன்பே நமது தலைமை ;

ஒற்றுமையே நமது பலம் ;

சேவையே நமது முன்னேறும் பாதை

அதிதீவிரமாகவும், லட்சிய நோக்குடனும், இணைந்து செயலாற்றுவோம். இப்போதே தொடங்குவோம். வாருங்கள் இளைஞர்களே... உங்களுக்கான அரசியல் காத்துக் கொண்டிருக்கிறது !" என்றார் மிக ஆவேசமாக.

International
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe