திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணைக் கொடுமையால் திருமணமாகி 78 நாட்களில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கன்னியாகுமர் மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவரை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சிக்கனகோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபிலா மேரி என்ற பெண். செவிலியராக பணியாற்றி வந்த இவருக்கு நிஜின் ராஜ் என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது பெண் வீட்டார், நிஜின் ராஜ் வீட்டிற்கு வரதட்சணையாக ரூ.7 லட்சம் பணமும், 50 சவரன் தங்க நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர் வரிசை, இருசக்கர வாகனம், ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு உள்பட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அளவிலான வரதட்சணை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று (04-07-25) மதியம் திடீரென பெண் வீட்டிற்கு, நிஜின் ராஜ் வீட்டில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், ஜெபிலா மேரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக,  தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, ஜெபிலா மேரி பரிதாபமாக உயிரிழந்ததைக் கண்டு கதறி அழுதுள்ளனர். அதனை தொடர்ந்து ஜெபிலா மேரி குடும்பத்தினர் போலீஸுக்கு இது குறித்து தகவல் கொடுத்து புகார் கொடுத்துள்ளனர். அதில், ஜெபிலா மேரியை தொடர்ச்சியாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் ஜெபிலாவை நிஜின் ராஜ் குடும்பத்தினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில், ஜெபிலா மேரியின் உடலை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், உயிரிழந்த ஜெபிலா மேரியினுடைய உடலை அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.