உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் 26 வயதான மது சிங். இவருக்கும் வணிகக் கடற்படை அதிகாரியான அனுராக் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்தின்போது, அனுராக் சிங், மது சிங்கின் குடும்பத்தினரிடம் வரதட்சணையாக 15 லட்ச ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு, மது சிங்கின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதையடுத்து திருமணம் நடந்திருக்கிறது.

இந்த நிலையில், ஒப்புக்கொண்டபடி மது சிங்கின் குடும்பத்தினரால் 15 லட்ச ரூபாய் பணம் கொடுக்க முடியவில்லை. மேலும், அவ்வளவு பெரிய தொகையை அவர்களால் ஈட்ட முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதை காரணம் காட்டி, அனுராக் சிங், மனைவி மதுவை அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார். கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல், மது தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். வரதட்சணை பணத்திற்காகவே இந்தக் கொடுமை எல்லாம் நடக்கிறது என்று எண்ணிய மதுவின் குடும்பத்தினர், 15 லட்ச ரூபாய் பணத்தை ஏற்பாடு செய்து அனுராக் சிங்கிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு, அனுராக், மதுவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், வரதட்சணை பணம் கொடுத்தபோதும், அனுராக் மதுவை துன்புறுத்துவதைத் தொடர்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி மது கணவர் வீட்டில் தூக்கில் சடலமாகத் தொங்கியுள்ளார். இதுகுறித்த தகவல் மதுவின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் மதுவின் உடலை கீழே இறக்கி வைத்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த மதுவின் பெற்றோர், "எனது மகளை அனுராக் குடும்பத்தினர் கொன்று தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்" என்று காவல்துறையில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அனுராக் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த மதுவின் சகோதரி, "மது ஒரு துடிப்பான பெண். அவள் மற்றவர்களுடன் பேசுவதை அனுராக் விரும்பவில்லை. நண்பர்களிடமோ எங்களிடமோ பேசக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். அதனால், அனுராக் வீட்டில் இல்லாத நேரத்தில் மட்டுமே மது எங்களிடம் பேசுவாள். காரணமே இல்லாத, சிறு சிறு விஷயங்களுக்குக் கூட மதுவை அனுராக் அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். அனுராக்குடன் மது (மதுபானம்) அருந்துமாறு அவளை வற்புறுத்தியுள்ளார். மது யாருடன் பேசுகிறார் என்று தெரிந்துகொள்வதற்காக, அவரது செல்போன் அழைப்பு, சோசியல் மீடியா பதிவுகள், உரையாடல்கள் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். முதலில், நானும் மதுவும் பேசிக்கொண்டிருந்தபோது, 'நீங்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களா (லெஸ்பியனா)?' என்று கூட கேட்டார். கடைசியாக, அனுராக்கும் மதுவும் காரில் வெளியே சென்றனர். அப்போது, சாலையில் பள்ளம் இருந்ததால், மது காரை இடதுபுறமாகத் திருப்பியுள்ளார். அதற்கு, 'ரோடில் எவன பார்க்க கார் அந்தப் பக்கம் திருப்புற?' என்று கேட்டு அடித்ததாக மது என்னிடம் கூறினாள்" என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

Advertisment

இதுகுறித்து பேசிய மதுவின் தந்தை, "எனது மகள் கர்ப்பமாக இருந்தபோது, அதனை அனுராக் கலைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். அத்துடன், அவர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவிலும் இருந்து வருகிறார். அண்மையில், அவரது முன்னாள் காதலியொருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருக்கிறார். ஆகஸ்ட் 3-ஆம் தேதி, அனுராக் தாக்கியதாக மது போனில் கூறினார். ஆனால், அடுத்த நாள் (ஆகஸ்ட் 4), மது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர். அவள் தற்கொலை எல்லாம் செய்திருக்க மாட்டாள்ர்; அனுராக் தான் கொன்றிருப்பான்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

சம்பவத்தன்று, மது மதியம் 12 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், மாலையில் தான் மதுவின் குடும்பத்தாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சம்பவம் நடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி, வீட்டிற்கு சமையல் செய்ய வரும் பணிப்பெண்ணை வரவேண்டாம் என்று அனுராக் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனாலும், அந்தப் பெண் வந்து கதவைத் தட்டியும், வீடு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. அதே சமயம், அனுராக் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிட்டும் இருக்கிறார். இது காவல்துறையினருக்கு மிகுந்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

அதே சமயம், மதுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதிப்பட்டிருக்கிறது. இருப்பினும், வரதட்சணை உள்ளிட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் அவரைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Advertisment

திருமணமான 5 மாதத்தில், புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், குடும்பத்தார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.