ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் ஒட்டவலுவை சேர்ந்தவர் துரைசாமி மகன் பார்த்திபன் (47). லாரி டிரைவரான பார்த்திபனுக்கும் சுசிலா (45) என்பவருக்கும் திருமணமாகி 16 வயதில் ஒரு மகனும் 15 வயதில் மகளும் உள்ளனர். இந்த சூழ்நிலையில் அவரது மனைவி, கணவரை பிரிந்து குழந்தைகளுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் தாளவாடியைச் சேர்ந்த பரமசிவம்(50) என்பவரது மகள் ருக்குமணி(33) என்பவரை கடந்த 2019ம் ஆண்டு பார்த்திபன் பெற்றோர் சம்மதத்துடன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. ருக்குமணிக்கு ஏற்கனவே வெள்ளகோயிலைச் சேர்ந்த பூபதி என்பவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் இறந்து விட்டதால், இரு குழந்தைகளையும் வெள்ளகோவிலில் உள்ள கணவரின் பெற்றோர் விட்டு விட்டு, பார்த்திபனை திருமணம் செய்துள்ளார்.

பார்த்திபன் கடந்த 6 மாத காலமாக வேலைக்கு செல்லமால் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன், ருக்குமணியின் தம்பி ஆனந்த் இறந்து விடவே அவரது பொலிரோ ஜீப்பை ருக்கமணியின் பெற்றோர் பார்த்திபனுக்கு கொடுத்து இருந்துள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான பார்த்திபன், அந்த பொலிரோ ஜீப்பையும் அடமானம் வைத்து மது அருந்தி உள்ளார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை பிரிந்து கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றோர் வீட்டிற்கு ருக்குமணி சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து ருக்குமணியின் பெற்றோர், இருவரையும் சமாதானம் செய்து வைத்துவிட்டு நேற்று முன்தினம் இரவு தாளவாடி திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு மது போதையில் சென்ற பார்த்திபன், ருக்குமணி மயங்கி கிடப்பதாக கூறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பார்த்திபனின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது ருக்குமணி இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ருக்குமணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ருக்குமணியின் கழுத்தில் காயம் இருந்த நிலையில், கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இதனிடையே ருக்குமணியின் உடற்கூறு ஆய்வில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து தலைமறைவான பார்த்திபனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்த பார்த்திபன், ருக்குமணியின் தம்பி வைத்து இருந்த பொலிரோ ஜீப்பையும் அடமானம் வைத்து மது அருந்தி உள்ளார். தம்பியின் நினைவாக இருந்த ஜீப்பை அடமானம் வைத்ததால் ஆத்திரமடைந்த ருக்குமணி இது தொடர்பாக கணவனிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. கணவன், மனைவி தகராறை தீர்ப்பதற்காக வந்த ருக்குமணியின் பெற்றோர், பார்த்திபனை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்று குடிப்பழக்கத்தை கைவிட கூறி சத்தியம் வாங்கி கொண்டு நேற்று முன்தினம் மாலை தாளவாடி திரும்பி உள்ளனர். ருக்குமணியின் பெற்றோர் சென்ற சிறிது நேரத்தில் குடித்து விட்டு வந்த பார்த்திபனை கண்டு அதிர்ந்த ருக்குமணி இதுகுறித்து கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன், குழந்தை ருக்குமணியின் அருகிலேயே தூங்குவதை கண்டும் மனம் இறங்காமல், துப்பட்டாவினால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பார்த்திபனை போலீசார் கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். மதுப்பழக்கத்தினால் மனைவியின் கழுத்தை கணவனே துப்பட்டாவினால் இறுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.