கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 26 வயதான சங்கீதா கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசிலும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சங்கீதா.. கடந்த சில ஆண்டுகளாக பீளமேடு பகுதியில் உள்ள ஜிம்மிற்கு சென்று வந்துள்ளார். அப்போது, அவருக்கு அதே ஜிம்மிற்கு வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த கிஷோர் என்ற 28 வயது இளைஞரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறவே, கிஷோர் சங்கீதாவிற்கு ஒரு மோதிரத்தைப் பரிசளித்துக் காதலிப்பதாக கூறியுள்ளார். அந்த காதலை சங்கீதாவும் ஏற்றுக்கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த ஜோடி பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்த நிலையில் பொள்ளாச்சியில் உள்ள ஓட்டல் அறையில் வைத்து கிஷோர் சங்கீதாவிற்கு தாலி கட்டியிருக்கிறார். அதன்பிறகு, இதையே காரணமாக வைத்து கிஷோர் சங்கீதாவுடன் பல முறை தனிமையில் இருந்திருக்கிறார். இதன் நீட்சியாக, சங்கீதா திடீரென கருவுற்ற நிலையில் இந்த விஷயத்தை தன் காதலனிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதை பொருட்படுத்தாத கிஷோர் கருவை கலைக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்படவே சங்கீதா இந்த விஷயத்தை கிஷோர் வீட்டாரிடம் கூறியுள்ளார்.
அப்போது, கிஷோரும் அவரது அக்கா யாழினி என்பவரும் சேர்ந்து கூகுளில் பார்த்து ஏதாவது மருந்தைச் சாப்பிட்டு கருவைக் கலைக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, குழந்தை பிறந்தால் வீட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று தகாத வார்த்தைகளால் திட்டி சங்கீதாவை விரட்டியடித்துள்ளனர். இதனிடையே, தனக்கு தாலி கட்டியது குறித்து கிஷோரிடம் கேட்டபோது, "அது வெறும் கயிறு தான், அதை எப்படி திருமணம்னு சொல்ல முடியும்?" என சர்வ சாதாரணமாகக் கேட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, கிஷோருக்கு சங்கீதா மட்டுமின்றி வேறொரு பெண்ணுடனும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா கிஷோருடன் இருந்த வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களுடன்.. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.