கேரளத்தில் அரசு பேருந்து ஒன்றில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட நபரை இளம்பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்து வெளுத்து வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கேரள மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் பயணித்துக் கொண்டிருந்தார். பேருந்தில் மூன்று பேர் அமரும் இருக்கையில், ஜன்னல் ஓரத்தில் அந்த இளம்பெண்ணும், அவருக்கு அருகில் அவரது தங்கை(சிறுமி)யும் அமர்ந்திருந்தனர். மூன்றாவதாக, 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் வந்து அமர்ந்திருக்கிறார்.
பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த நபர் தனது கையால் சிறுமியிடம் பாலியல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். இதனை அந்தச் சிறுமி தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். மேலும், இதுகுறித்து தனது சகோதரியிடம் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், உடனடியாக எழுந்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபரை ஓங்கி கன்னத்தில் அறைந்து, “என் தங்கச்சிய தொட்டு பாக்கணுமா? உன் வீட்டிலும் இதுபோலதான பெண்கள் இருக்காங்க..? உன் அம்மாவுக்கு இருக்கிறது தானே எங்களுக்கும் இருக்கு? உன் வீட்டு பொண்ணுங்க கிட்ட போய் இந்த வேலையைக் காட்டு! எங்கள் அப்பா வயசுல இருக்க, இத்தோட நிறுத்திக்க...” என்று கடுமையாக எச்சரித்து வெளுத்து வாங்கியிருக்கிறார்.
கையும் களவுமாகப் பிடிபட்ட அந்த நபர், சிறுமியிடம் “சாரிம்மா....” என்று மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, கேரள காவல்துறை, சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து, அந்த நபர் யார், எந்தப் பேருந்து என்று விசாரணை நடத்தி வருகிறது.
உலகளவில் மூன்று பெண்களில் ஒருவர் உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ பாதிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. நாகரிகம் அடைந்துவிட்டதாகக் கூறிக்கொள்ளும் இந்த மனித சமூகம், பெண்கள் விஷயத்தில் மட்டும் ஏனோ தங்களை மாற்றிக்கொள்ள மறுக்கிறது. அதன் காரணமாகவே பள்ளிகள், வீடுகள், பேருந்துகள், பணியிடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களும் பாலியல் தொல்லைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுத்து, முற்றிலும் பண்பட்ட சமூகமாக மாற, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, பெண்களையும் பெண் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் வலியுறுத்துகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/28/103-2025-07-28-15-58-36.jpg)