சாத்தான்குளம் அருகேயுள்ள பழனியப்பபுரத்தைச் சேர்ந்தவர் பத்மராஜன் மகள்19 வயதான சுபா. இவர், 23-ஆம் தேதி நண்பகலில் வீட்டில் யாரும் இல்லாமல் தனிமையில் இருந்தபோது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, உயிரிழந்த சுபாவின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இளம்பெண் சுபாவின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த சுபா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று முதற்கட்டமாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுபா, 2021-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான இசக்கி ராஜா என்பவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். ஒரு கட்டத்தில், இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இதை அறிந்த சுபாவின் குடும்பத்தினர், இருவரையும் கண்டித்ததால், இசக்கி ராஜாவைச் சந்திப்பதை சுபா தவிர்த்து வந்துள்ளார். ஆனாலும், இசக்கி ராஜா விடாப்பிடியாக அவரைத் தினமும் பின்தொடர்ந்து, காதலை வெளிப்படுத்தி வந்துள்ளார். மேலும், சுபாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இது குறித்து, சுபாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அப்போதைய ஆய்வாளர் இந்திரா விசாரணை நடத்தினார். பின்னர், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்ஸோ (POCSO) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, இசக்கி ராஜாவைக் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஜாமீனில் வெளியே இருந்த இசக்கி ராஜா, சுபாவின் வீட்டிற்குச் சென்று, "வழக்கை வாபஸ் வாங்குங்கள். உங்கள் பெண் இப்போது மேஜராகிவிட்டாள். நகை, நட்டு எதுவும் வேண்டாம். நானே திருமணம் செய்து கொள்கிறேன்," என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதைக் கேட்டு ஆக்ரோஷமடைந்த சுபாவின் குடும்பத்தினர், "பெண் கேட்டு எங்கள் வீட்டிற்கு எல்லாம் வரக்கூடாது. நடையைக் கட்டு," என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதனிடையே, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றச்சாட்டுக்கு உள்ளான இசக்கி ராஜாவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து, நீதிபதி முருகன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இசக்கி ராஜா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பைக் கேட்டு, இசக்கி ராஜா மீது பரிதாபம் அடைந்த இளம்பெண் சுபா, தீர்ப்பு வெளியான நாள் முதல் தூக்கமின்றி மனமுடைந்து தவித்து வந்திருக்கிறார். சுபாவை அவரது குடும்பத்தினர் சமாதானம் செய்துள்ளனர். இருப்பினும், சரிவரச் சாப்பிடாமல், சுபா விரக்தியிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், மன உளைச்சல் காரணமாக சுபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி