விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி முன்பு நின்றுகொண்டு இரு இளைஞர்கள் ரீல்ஸ் எடுத்துள்ளனர். அந்த ரீல்ஸ் வீடியோவில் ஆபாசமாக ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், தாக்கிக்கொண்டும் சண்டையிடுவது போல நடித்து ரீல்ஸ் எடுத்துள்ளனர். அதே சமயம், தாங்கள் உண்மையாகவே சண்டையிடுவது போன்ற தோற்றத்தை சாலையில் சென்றவர்களிடம் ஏற்படுத்தியுள்ளனர்.

Advertisment

ஆனால், இந்த ரீல்ஸ் சண்டையை உண்மையான சண்டை என்று நினைத்த வாகன ஓட்டிகள் சிலர் அவர்களைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றுள்ளனர். அந்த வகையில், இவர்கள் இருவரும் உண்மையிலேயே சண்டையிடுவதாக நினைத்து, அவர்களைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்ற இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர், அருகில் பேருந்து நிறுத்தத்தில் நின்ற தனியார் பேருந்தின் மீது மோதி கீழே விழுந்தார். ஆனால், அப்போதுகூட அவரை ஓடிச் சென்று தூக்காமல், விபத்தில் சிக்கிய நபரைப் பார்த்து சிரித்தவாறே கேலியும் கிண்டலும் செய்துள்ளனர்.

Advertisment

மேலும், அந்தக் காட்சிகளையும் தங்களது செல்போனில் பதிவு செய்த அந்த இளைஞர்கள், சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு, வேண்டுமென்றே ஒருவரை விபத்தில் சிக்க வைத்த இந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிவகாசி காவல்துறையும் இச்சம்பவத்தை அறிந்து விசாரணை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.