மருத்துவத் துறையில், விபத்து உள்ளிட்ட காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறவினர்களின் அனுமதியுடன் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று, உறுப்புப் பழுதால் உயிருக்கு போராடும் பலரது உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர். உடல் உறுப்பு தானம் என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது.

Advertisment

இதேபோல, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பலரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு வருகின்றன. 

Advertisment

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள இடையாத்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் மகன் முத்துப்பாண்டியன் (29). இவர் புதுக்கோட்டை சிப்காட் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 11ஆம் தேதி வேலை முடிந்து தனது பைக்கில் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றபோது ஒரு கார் மோதி படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த முத்துப்பாண்டியை அக்கம்பக்கத்தினர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாமல் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவக் குழுவினர் முத்துப்பாண்டியின் உறவினர்களை அழைத்து, “மூளைச்சாவு அடைந்துள்ளதால் இனி உயிர் பிழைப்பது சிரமம். ஆனால் அவரது உடல் உறுப்புகள் உயிருடன் நல்ல நிலையில் உள்ளன. இந்த உறுப்புகளை அவரது உடலில் இருந்து எடுத்தால் உயிருக்கு போராடும் 10 உயிர்களைக் காப்பாற்றலாம்” என்று கூறினர்.

Advertisment

அதனை கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்த பெற்றோர்,  “என் மகன் உருவம் இல்லை என்றாலும் அவரது உறுப்புகளாவது வாழட்டும். அந்த உறுப்புகளால் பல உயிர்கள் வாழும் என்றால் எடுத்துக்கொள்ளுங்கள்”என்று அனுமதி கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் மூளைச்சாவு அடைந்த முத்துப்பாண்டியன் உடலில் இருந்து அறுவைச் சிகிச்சை மூலம் உடல் உறுப்புகளை அகற்றினர். அகற்றப்பட்ட உறுப்புகளை மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை ஆகிய ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தன் உயிரைக் கொடுத்து 10 பேர்களின் உயிரைக் காக்க உடல் உறுப்புகளைத் தந்து உதவிய முத்துப்பாண்டியன் உடலுக்கு மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள், அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என ஒட்டுடன் கூடி அஞ்சலி செலுத்தி, மலர் வளையம் வைத்து மரியாதை செய்து ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். 

02

இதையடுத்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட முத்துப்பாண்டியன் உடலுக்கு அறந்தாங்கி கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினர். இதேபோல கடந்த வாரம் அன்னவாசல் பகுதியில் ஒருவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 

இதன் மூலம் உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுபோல உடல் உறுப்பு தானம் செய்யும் குடும்பங்களுக்கு அரசு மரியாதை செய்வதுடன் அரசு வேலைகளும் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.