Young man while talking to woman - Shock near police station Photograph: (CHENNAI)
சென்னை அசோக் நகர் காவல் நிலையத்திற்கு அருகிலேயே இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அசோக் நகர் காவல் நிலையம் அருகே இன்று மதியம் நான்காவது அவென்யூ பகுதியில் இளைஞர் ஒருவர் காரில் அமர்ந்தபடி பெண் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அந்த இளைஞரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். அதேபோல் இந்த சம்பவத்தில் இளைஞருடன் பேசிக் கொண்டிருந்த பெண் மாயமாகியுள்ளார்.
அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கிறது.
காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயர் பிரகாஷ் என்பதும், பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. ஏன் பாண்டிச்சேரியில் இருந்து இங்கு வந்தார்? அவருடன் பேசிக் கொண்டிருந்த பெண் யார்? எதன் காரணமாக இந்த கொலை நிகழ்ந்து? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையில் ஈடுபட்ட நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us