கேரளாவின் பாலக்காட்டில், ஒரு இளைஞன் கொட்டாவி விட்டதால் வாய் திறந்த நிலையிலேயே 'லாக்' ஆகி, மூட முடியாமல் கடுமையான வலியால் தவித்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி - அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தில் வந்து நின்றுள்ளது. அப்போது அந்த ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் சாதாரணமாக கொட்டாவி விட்டுள்ளார். ஆனால், அதற்குப் பின் அவரால் வாயை மூடவே முடியவில்லை. மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சித்தபோது, கடுமையான வலியால் அவதிப்பட்டுள்ளார். அவரால் தனது பிரச்சனையைச் சொல்லவோ உதவி கோரவோ முடியாமல் தவித்த நிலையில், அருகில் இருந்தவர்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, பாலக்காடு ரயில்வே மருத்துவமனையின் மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து, பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிகிச்சை அளித்தார். பின்னர், அவர் தனது வாயை மூடியும், பேசியும் இயல்பு நிலைக்குத் திரும்பினார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞர் மீண்டும் அந்த ரயிலிலேயே சொந்த ஊருக்குச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், உடனடியாக உதவிய மருத்துவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.